ஈரோடு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ் மீண்டும் போட்டியிட தி.மு.க.விடம் மல்லுக்கட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டியில் போட்டியிட்ட ஜி-.கே.வாசன் அளித்துள்ள பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவு பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காத நிலையே உள்ளது. மறுப்பக்கம் கடந்த முறை போல இந்த தொகுதி தனக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார். அப்படி ஒதுக்கும் பட்சத்தில் ஜி.கே.வாசனின் ஆதரவாளர் யுவராஜ் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்;- தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினோம். இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம் என்றார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் முதல் இலக்கு. கூட்டணி கட்சி எடுக்கும் முடிவுக்கு தமாகா உறுதுணையாக இருக்கும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியிருப்பதைப் பார்த்தால், இந்த முறை கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க. போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பேச்சை கூர்ந்து கவனித்தால் இது புரியும்!

அதே போல் பா.ஜ.க.வும் பொறுப்புக்குழுவை நியமித்திருந்தாலும், அக்கட்சி போட்டியிடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது. கூட்டணி தர்மத்தை மீறி… அ.தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. போட்டியிடாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்யிடும். ஈரோடு கிழக்கு எங்களுடைய தொகுதி… எனவே கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொங்கு மண்டல தி.மு.க.வின் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி தி.மு.க. வேட்பாளரை களத்தில் இறக்க தயாராகி வருகிறார். இதனால் அரசியல் கட்சிகளுக்கிடையே மல்லுக்கட்டுகள் ஆரம்பமாகியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal