ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அங்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என கழகங்களுக்குள் ஒரு விவாதமே நடந்து வருகிறது.

இது பற்றி கழகங்களுக்கிடையே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று காது கொடுத்துகேட்டோம் நடக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்…

கடந்த முறை ஈரேடு கிழக்கு தொகுதியை கூட்டணியான தமாகாவுக்குதான் ஒதுக்கியிருந்தது அதிமுக.. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் தோற்றுவிட்டார். இந்த சூழலில், இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசித்திருக்கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். ‘நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், தமாகா சார்பில் மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என ஜி.கே.வாசனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் முந்தைய தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை இழந்த யுவராஜா. இதனையடுத்து, தமாகாவுக்கே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று எடப்பாடியை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளார் ஜி.கே.வாசன். அதற்கு எடப்பாடி பழனிசாமி வாசனுக்கு நாசூக்காக பதில் தந்திருக்கிறார்.

அதாவது, ‘கடந்த பொதுத் தேர்தலில் தமாகாவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டிருந்ததால் கூட்டணி தர்மத்தை மதித்து தமாகாவுக்கு ஒதுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவனின் குடும்பத்தில் ஒருவருக்கு சீட் ஒதுக்கப்பட்டால், அனுதாப அலையில் மீண்டும் காங்கிரஸ் ஜெயித்து விடும். அதை தடுக்க வேண்டுமானால் அங்கு அதிமுக போட்டியிடுவதுதானே சரியாக இருக்கும்?’ என்று வாசனிடம் சொன்னாராம் எடப்பாடி.

அதற்கு ஜி.கே.வாசன், ‘திமுகதான் ஆட்சிக்கு வரும்ங்கிற எதிர்பார்ப்பில் பொதுத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்துவிட்டனர். இந்த முறை அப்படி இருக்காது. அதனால் ஈசியாக தமாகா ஜெயிக்கும். அதனால், மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு தரவேண்டும்’ என அன்போடு கேட்டிருக்கிறார்.

ஜி.கே.வாசன் மீது எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் அதிக மரியாதை வைத்திருந்தாலும், ‘’இரட்டை இலை சின்னத்தில் தான் கடந்த முறை தமாகா போட்டியிட்டது. ஆனா, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் போது இரட்டை இலை சின்னம் உயிருடன் இருக்குமா? அல்லது முடக்கப்பட்டு விடுமா? என்று தெரியவில்லை. ஏனென்றால், அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா? நீடிக்காதா? என்பதே இன்னும் உறுதியாகவில்லை. அது இறுதி செய்யப்படுவதை வைத்துதான் சின்னம் என்னவாகும்? என்பதெல்லாம் தெரியவரும்.. அதனால் அதிமுக பொதுக்குழு மீதான வழக்கில் தீர்ப்பு வரட்டும். அதற்கு முன்னதாக கட்சியினரிடம் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன்’ என்றிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

தமாகா – அதிமுக இடையே கூட்டணி பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கொங்கு அதிமுகவினர் முரண்டு பிடிக்கிறார்களாம். தமாகாவுக்கு வாய்ப்பு தரக்கூடாது, அதிமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்று எடப்பாடியிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்களாம். இதற்காக பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி எடப்பாடியிடம் சீனியர்கள் பேசியிருக்கிறார்கள், ‘இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் சரி, திமுக போட்டியிட்டாலும் சரி, அதை எதிர்த்து அதிமுகதான் போட்டியிட வேண்டும். மறுபடியும் தமாகாவுக்கு ஒதுக்கினால் ஈசியாக அந்த கட்சியை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுவிடும்.

அதனால் தமாகாவுக்கு வாய்ப்பு தர வேண்டாம், அதிமுக தான் போட்டியிட வேண்டும். அதிமுக போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான். திமுக போட்டியிட்டால் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியே அக்கட்சியை தோற்கடித்து விடும். காங்கிரஸ் போட்டியிட்டால் அந்த கட்சியை திமுகவினரே தோற்கடிப்பார்கள். அதனால், திமுக-காங்கிரசை வீழ்த்த வேண்டுமாயின், எதிர்த்து போட்டியிடுகிற கட்சி வலிமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள். இல்லையென்றால், மறுபடியும் திமுக-&காங்கிரசுக்கே வாக்களித்து விடுவார்கள்.

அந்த வகையில் வலிமையான கட்சி அதிமுகதான். அதனால் வாய்ப்பினை நாம் நழுவ விட்டுவிடக்கூடாது. அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, மக்களின் ஆதரவை திமுக இழந்து விட்டது என்று பிம்பத்தை உருவாக்க வேண்டுமானால் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அந்த தோல்வியை கொடுக்கும் சக்தி நமக்குத்தான் இருக்கிறது. அதனால் இடைத்தேர்தலில், கூட்டணி தர்மத்தை பற்றியெல்லாம் யோசிக்காமல் அதிமுக போட்டியிடுகிற வகையில் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும்.

நாம் போட்டியிட்டு ஜெயிப்பதன் மூலம், உங்கள் தலைமையை அதிமுக தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள நேரிடும், திமுக ஆட்சி மக்களின் செல்வாக்கையும் மேலும் இழக்க நேரிடும். உங்களுக்கு போட்டியாக ஓபிஎஸ்சை கொம்பு சீவிவிடும் பாஜகவுக்கும் செக் வைப்பது போல ஆகிவிடும் என மூன்று காய்களையும் நம்மால் அடிக்க முடியும். அதனால், அதிமுகதான் போட்டியிட வேண்டும்’ என்று அதிமுகவின் கொங்கு மண்டல சீனியர்கள் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறார்கள்.

திமுக ஆளும்கட்சி என்பதால், அவர்களே பிரதானமாக ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என்பதை எடப்பாடி தரப்பு அறியாமல் இல்லை. அதேபோல, இடைத்தேர்தலில் நேரடியாக அதிமுகவே போட்டியிட வேண்டும் என்ற ஆசை எடப்பாடி தரப்புக்கு இருந்தாலும், இரட்டை இலை சின்னம் விஷயத்தில், கோர்ட்டு தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்றும் தெரியவில்லை.

இதற்கிடையே, பொதுக்குழுவிவகாரத்தில் எப்படி தீர்ப்பு வந்தாலும், பாதகமாக தீர்ப்பு கிடைப்பவர்கள் தேர்தல் ஆணையத்தைதான் அணுகுவார்கள். தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் கட்சி சொல்வதைத்தான் கேட்பார்கள். இந்தநிலையில்தான் இந்த மாத இறுதியில் ஓ.பி.எஸ். டெல்லி செல்ல இருக்கிறாராம். இதையெல்லாம் மனதில் வைத்து, இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றாலும், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு பலத்தை காட்ட முடிவு செய்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

ஏற்கனவே, ஜா, ஜெ. அணி பிளவு பட்ட போது சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி! என்பது குறிப்பிடத் தக்கது. எடப்பாடியின் கணக்கு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal