அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்துக்காக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட உச்ச நட்சத்திரம் சிவராஜ் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மலையாள சினிமாவின் மூத்த மற்றும் உச்ச நட்சத்திரமான மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இதுபோக ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு என பல நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்ததால் ஜெயிலர் படத்துக்கு தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நெல்சன் பணியாற்றி வருகிறாராம்.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் நடிப்பதால் ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தே காணப்படுகிறது. இப்படி இருக்கையில், ஜெயிலர் ஷூட்டிங்கே நிறைவு பெறாத நிலையில் ரஜினியின் 170வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி சூர்யாவை வைத்து ஜெய்பீம் படம் எடுத்த இயக்குநர் டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தனித்துவமான மற்றும் சமூகம் சார்ந்த கதைக் களங்கை கையாளும் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. ஏனெனில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சமூக பிரச்னைகளை கொண்ட கபாலி, காலா போன்ற படங்களில் நடித்ததற்கு பிறகு மீண்டும் ரஜினி அதே பாணியிலான படத்தில் நடிக்கப் போகிறாரா என்றும் ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal