ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
செலவினங்களை குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம், தேசிய சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள், அரசியல் கட்சியினர்களிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது.
அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. அதில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த படிதத்திற்கு வரும் 16ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், அதிமுக தரப்பிலிருந்து தற்போது இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.