உள்கட்சி மோதல், வீடியோ விவகாரம் எழுந்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர், கர்நாடகாவில் எஸ்பியாக பணியாற்றி வந்தார். திடீரென பதவியை ராஜினாமா செய்து விட்டு ரஜினி தொடங்க உள்ள கட்சியில் சேர இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரஜினி கட்சி தொடங்காததால் இவர் விவசாயம் செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால் திடீரென பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தலைவர் பதவி வழங்கப்பட்ட பிறகு கட்சியில் மூத்த தலைவர்களை அவர் ஓரங்கட்டி விட்டார் என்றனர் எதிர்தரப்பினர். இதனால் கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்திருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும், அலுவலகத்தில் சுழற்சி முறையில் பணி நேரத்தின்போது ஒரு காவலரும் ஆயுதங்களுடன் பணியில் இருப்பார்கள். இந்தநிலையில், அவருக்கு கட்சியின் சீனியர்களுடன் மட்டுமல்லாது தனக்கு எதிரியாக, போட்டியாக இருப்பவர்களை எல்லாம் கட்சியில் இருந்து காலி செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அதில் முதல் பலியாக கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது. இதற்கு அண்ணாமலை தூண்டுதல்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆபாச வீடியோ வெளியானதால் கே.டி.ராகவன் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்தநிலையில், திருச்சி சூர்யா -சிறுபான்மை பிரிவு செயலாளர் டெய்சி ஆகியோரின் ஆபாச ஆடியோக்கள் வெளியானது. இருவரையும் ஓரங்கட்டவே அண்ணாமலையே தன்னிடம் பஞ்சாயத்துக்கு வந்த ஆடியோவை வெளியிட்டதாக இருவருமே சந்தேகப்பட்டு குற்றம்சாட்டத் தொடங்கினர்.

இந்தநிலையில், அண்ணாமலையின் நெருங்கிய நண்பரும், பாஜவின் விளையாட்டு பிரிவு செயலாளருமான அமர்பிரசாத் ரெட்டிக்கும், அலிஷா அப்துல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரிடமும் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோக்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதே பிரச்னைக்காக குரல் எழுப்பிய காயத்திரி ரகுராம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, நீக்கப்பட்டார். அதேபோல அமர்பிரசாத் ரெட்டி மற்றும் மீஞ்சூர் செல்வம் ஆகியோருக்கும் இடையே தற்போது பிரச்னை எழுந்து, கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.

அதேபோல அண்ணாமலை நடத்தும் வார் ரூமில் உள்ள செல்வக்குமாருக்கும், பாஜவில் உள்ள கல்யாண சுந்தரம், சினிமா தயாரிப்பாளர் கோபி மற்றும் அதிமுக ஆதரவு நியூஸ் சேனலுக்கு இடையே மோதல் வெடித்து சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அண்ணாமலைதான் காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதே குற்றச்சாட்டை தெரிவித்தனர். இதனால் அண்ணாமலை தொடர்ந்து ஹனி டிராப்பில் சிக்காமல் இருக்கத்தான் அவருக்கு திடீரென மத்திய அரசு ஒய் பிரிவில் இருந்து இசட் பிரிவு பாதுகாப்புக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது என்றும் கருத்து நிலவுகிறது.

இசட் பிரிவு பாதுகாப்பின் மூலம் அவருக்கு 2 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், 10 சிஆர்பிஎப் போலீசார் கூடுதலாக பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவருடன் கூட மத்திய பாதுகாப்பு படையினர் இருப்பார்கள். அவர்களிடம் இயந்திர துப்பாக்கியும் இருக்கும். இதன் மூலம் அண்ணாமலை தனியாக எங்கும் செல்ல முடியாது, யாரையும் பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அண்ணாமலைக்கு வெளிப்படையான எந்த அச்சுறுத்தலும் இல்லை.

உள்கட்சி பிரச்னை மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நக்சலைட்டுகள் மற்றும் கோவை வெடி விபத்து தொடர்பாக அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இசட் பிரிவு பாதுகாப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணாமலை, ‘‘முன்பு போல நான் எங்கும் தனியாக சுதந்திரமாக செல்ல முடியாது. 48 மணி நேரத்திற்கு முன்பு, அடுத்து நான் எங்கு செல்ல இருக்கிறேன் என்பது பற்றி பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தாக வேண்டும்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எண்ணிடம் போட்டோ எடுக்க விரும்புவார்கள். நானும் சாதாரணமாக அவர்களது தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வேன். தற்போது அந்த சுதந்திரம் எல்லாம் இருக்காது. எனக்கு இந்த பாதுகாப்பில் உடன்பாடில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்!

ஆனால், நான் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. எனவே, மத்திய அரசு உளவுத்துறையின் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் எனக்கு பாதுகாப்பு கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. இது போன்ற பாதுகாப்பு இந்தியாவில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது’’ என்றார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal