பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இதனால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கலையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் இன்று வரை 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தமட்டில் சென்னை கோயம்பேடு, கேகேநகர், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்கி வருகிறது.

சிறப்பு பஸ்களில் மக்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவு செய்யாமல் நேரடியாக டிக்கெட் பெற்றும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இரவில் ஆய்வு செய்தார். பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பிறகு அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சராசரியாக இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 540 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களில் 1544 பஸ்களும், 1855 சிறப்பு பஸ்களில் 904 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 5,134 பஸ்களில் மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்காக துவங்கப்பட்ட சென்னை ஆப் மூலமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் இயக்கத்தை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து இருப்பவர்களுக்கு லிங்க் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பஸ் இயக்கத்தை அறிந்து கொள்ள முடியும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தற்போது வரை புகார் வரவில்லை” என்றார்.

இந்நிலையில் இன்று காலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முக்கிய தகவலை வெளியிட்டது. அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி இன்று காலை வரை சிறப்பு பஸ்களில் 3.94 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து தினமும் இயங்கும் 2,100 பஸ்களுடன் 2,010 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. மேலும் நாளை பொங்கல் என்பதால் இன்று காலையில் இருந்தே கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயிலிலும் ஏராளமானவர்கள் திரும்புகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சென்றுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர். இன்றும் ஏராளமானவர்கள் செல்ல உள்ளதால் சென்னையை காலி செய்தவர்களின் எண்ணிக்கை என்பது சுமார் 10 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனியார் ஆம்னி பஸ்கள், சொந்த வாகனங்கள் என எல்லோரும் பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal