தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் தி.மு.க. பேச்சாளர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசினார். ‘செருப்பால் அடிப்பேன்’ எனக்கூறியதோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘ஆளுநர் மாளிகை அளித்த புகார் குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

தமிழக அரசியல் பார்வையாளர்களும், சமூக ஆர்வலர்களும் எங்கே போய் முடியுமோ இந்த விவகாரம் என முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal