அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும் மூன்று நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது!

அ.தி.மு.க. பொதுக்குழுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வருகிற 16&ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே, அடுத்த வாரத்தில், அதாவது பொங்கல் விடுமுறை முடிந்து தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் மூன்று நாட்களாக இந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான் என்ற கருத்தை முன்வைத்தார் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்.

தொடர்ந்து வாதிட்ட அரிமா சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதிமுக பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகள் குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. அதிமுக அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால் கட்சி முடங்கும் நிலை வந்ததால் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாவதால் மற்ற பதவிகளும் தானாக ரத்தாகிவிடும் என்பது தவறு. பொதுக்குழு என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆனது. எனவே, அது எடுக்கும் முடிவு அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவாகும்.

விதி எண் 5 படி அதிமுக பொதுக்குழுவின் முடிவே இறுதியானதாகும். இதுவே அதிமுகவின் அடிப்படை சட்டம். விதி எண் 19 படி பொதுக்குழுவே உயர் அமைப்பாகும். விதி எண் 43-ன் படி அதிமுக கட்சி விதிகளை திருத்தவும், நீக்கவும் உருவாக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. மேலும், மொத்தம் 2460 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் இவர்களின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நோட்டீஸ் கொடுக்கவில்லை என மனுதாரர் கூறவில்லை. ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கையெழுத்திடவில்லை என்பதே அவர்களது வாதம். எனவே, நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது என்றே கொள்ள வேண்டும். பொதுக்குழுவால் 5ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதே பொதுக்குழு அப்பதவிகளை ரத்து செய்தபின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூற முடியாது.

ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று 1.12.21 அன்று செயற்குழுவால் தீர்மானம் நிறைவேற்றபட்ட போது இத் தீர்மானம் பொதுக்குழுவால் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் ஜூன் 23ஆம்தேதி நடந்த பொதுக்குழுவால் இத்தீர்மானம் அங்கீகரிக்கப்படாததால் அப்பதவிகள் காலாவதியாகி விட்டன. எனவே, ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டு மனுதாரர் தனது தரப்பு பலத்தை காட்டலாம் என தனி நீதிபதி தெரிவித்தார். பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும் பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது. ஜூலை 11 பொதுக்குழுவில் 2460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5 சதவீத ஆதரவு. ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும் அப்படி இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு அது தெரியாதா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத போது கட்சி நலன் கருதி தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியும். அதிமுக பொதுக்குழுவை பழனிச்சாமியின் விருப்பப்படி அவராக கூட்டியது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள்.

ஆனால், உண்மையில் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கு பேர் விருப்பத்தின் அடிப்படையில் தான் கூட்டம் கூட்டப்பட்டது. கட்சியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கட்சியின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கானது அல்ல என வாதிட்டார்.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தன் வாதங்களை முன் வைத்தார். அப்போது நீதிபதிகள் அவரிடம் ஒற்றைத் தலைமை ஏன் என விளக்கம் கேட்டனர்.

அதற்கு அவைத் தலைவர் தரப்பு வழக்கறிஞர், கட்சியின் நலன் கருதியே இரட்டைத் தலைமை முறை முதலில் கொண்டு வரப்பட்டது. பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார். ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது என்பது பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோது அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்கினீர்கள்? என்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பினர். ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரிலே அவர் நீக்கப்பட்டார் என அதிமுக அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அதிமுக சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் அருமையான வாதம் என நகைச்சுவையாக குறிப்பிட்டனர்.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உணவு இடைவேளைக்காக பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மீண்டும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அலுவலகம் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் பதில் வாதங்களை முன்வைத்தார்.

அதிமுகவில் இல்லாத இரட்டை தலைமையை கொண்டு வந்ததே எடப்பாடி பழனிச்சாமிதான் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. எல்லாமே சரியாக போய் கொண்டிருக்கும் போது இரட்டை தலைமையை நீக்கி விட்டு மீண்டும் ஒற்றைத்தலைமை என்று கூறி குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 16ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்றைய தினம் பரபரப்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை பொறுத்தே அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக நீடிப்பாரா அல்லது ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராக மீண்டும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்வாரா என்பது தெரியவரும்.

எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் ஆதரவு 95 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது என்ற வாதத்தை அழுத்தம் திருத்தமாக உச்சநீதிமன்றதில் வைத்ததால், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal