ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால் தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும்.

அதன்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே மக்கள் மத்தியில் ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தி.மு.க. போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் பிரபலமான ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தற்போதே தங்களுக்கு தெரிந்த தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர். அதேபோல் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதில் 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். ஆனாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் யுவராஜா கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

எனவே இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்குதொகுதி மாநகராட்சி மற்றும் சில கிராம பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானி சாகர், பெருந்துறை, பவானி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.கவும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை காட்ட அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்க்க தி.மு.க.வும் தயாராகி வருகிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கோட்டை அல்ல அது தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும். அ.தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்கொள்ள தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர். இதனால் இந்த இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பா.ஜனதாவும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று கூறி வருகிறது. இங்கு தான் பா.ஜனதாவுக்கு 2 பெண் எம்.எல்.ஏக்கள் ( வானதி சீனிவாசன், சரஸ்வதி) உள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில் கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க., தனித்துப்போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில் மீண்டும் இதை செய்ய தயங்காது என்றும், தி.மு.க. கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி என்று பேசினார். மேலும் சில அ.தி.மு.க.வினரும் பா.ஜனதாவினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே அதற்கு முன்னோட்டமாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும் சரியான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்த பா.ஜனதா தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தங்கள் ஆட்சியின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே போல் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்பதை நிருபிக்க எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. எனவே தி.மு.க., அ.தி.மு.க.வே நேரடியாக மோதுமா? அல்லது கடந்த தேர்தல் போல் கூட்டணி கட்சிகளுக்கே போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்குமா? என்று தேர்தல் தேதி அறிவித்தப்பின் தெரியவரும்.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரம் குறித்து மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசாரும் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal