கடந்த 9ந்தேதி சட்டமன்றத்தில் மரபுகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். அதன் பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

கவர்னர் ரவி சட்டசபையில் உரையாற்றும் போது சில பத்திகளை தவிர்த்து விட்டு படித்தது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியின் கவர்னர் உரை தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட விரும்புவதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு தயாரித்து கொடுத்த கவர்னர் உரையில் என்னென்ன இருந்தது? அதில் எதையெல்லாம் கவர்னர் மாற்ற பரிந்துரை செய்தார்? அவை ஏற்கப்பட்டதா? போன்ற விவரங்களை கவர்னர் வெளியிட திட்டமிட்டுள்ளார். அவர் செய்த திருத்தங்கள் சபை குறிப்புக்கு ஏற்கபடாதது தொடர்பாகவும் அவர் தனது விளக்கத்தின் போது கருத்து தெரிவிப்பார் என்று தெரிகிறது. கவர்னரின் இந்த விளக்கம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடனும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சட்டசபையில் நடந்த விவகாரம் பற்றி ஜனாதிபதியை சந்திக்க தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. இதற்கும் பதிலடி கொடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி தயாராகி வருகிறார்.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு அவர் டெல்லி செல்வார் என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என்று தெரிய வந்துள்ளது. அதன் பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal