கடந்த முறை ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பது பொதுச்செயலாளரின் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி ஆகும்.
இந்த பதவி என்பது தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே , பொதுச்செயலாளர் பதவிக்கு பின் நேரடியாக தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் ஆகும். இந்த பதவிகளுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த உட்கட்சி தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இன்றைய (ஜனவரி 10ம் ) தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதன்படி, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்னிலையில் 4வது நாளாக விசாரணை நடந்தது. இன்றைய விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதில், 2017ம் ஆண்டு வரை கட்சிக்கு ஒரே தலைமை இருந்தது. அதிமுகவின் பொதுக்குழு, அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், இதற்கு முன் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாள ர்பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதனால் அந்த பதவி தானாக காலாவதியாகிறது. பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். பெரும்பான்மை அடைப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர்.
தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1ல் மூன்று பங்கு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அதனால் பொதுக்குழு செல்லும் என்று வாதம் வைத்தனர். கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும். பொதுக்குழு முடிவை எதிர்ப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியாது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை. கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டுமென 2 ஆயிரத்து 539 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. தொண்டர்களுக்கு அதிகாரம் இல்லை என்றுதான் இத்தனை காலம் எடப்பாடி வாதம் வைத்து வந்தார். ஆனால் இன்று கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வித்தியாசமான வாதங்களை வைத்தது.
அதன்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளார் பொறுப்புகளை நீக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு இருப்பதாக அவர் வாதம் வைத்து இருக்கிறார். இந்த பொறுப்புகளை உருவாக்கியது பொதுக்குழு. அதனால் இந்த பதவிகளை நீக்குவதற்கும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது. பொதுக்குழுவில் முடிவை ஏற்கும் நபரே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். கட்சியின் விதி எண் 7 இதை கூறுகிறது. இந்த பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கப்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டதை பொதுக்குழு இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அந்த ஒப்புதல் இல்லை. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் நலனை கருதி ஒற்றை தலைமை கொண்டு வருவது எப்படி தவறாகும். கட்சியின் நலனுக்கு தேவை என்றால் அதைதானே செய்ய வேண்டும்.
இடைக்கால பொதுச்செயலாளர் தவறு என்றால்.. ஒருங்கிணைப்பாளர்.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி சரியாகும். பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் இருப்பதே தானே சரியாக இருக்கும். அதனால் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்க பொதுக்குழுவில் முடிவு செய்தோம். ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பு ஜூன் 23ம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். அவர்தான் பொதுக்குழுவிற்கு வராமல் கட்சி விதிகளை மீறினார். பொதுக்குழுவில் விதிகளை பின்பற்றும் நபர்களே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என்று கட்சி விதி கூறுகிறது. அதை ஓ பன்னீர்செல்வம் மீறியதால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்துள்ளது.
இந்த வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.