தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி 48 பக்கங்களில் தயாரிக்கப்பட்டு இருந்த ஆங்கில உரையை வாசித்தார். அப்போது சில பத்திகளை அவர் படிக்காமல் தவிர்த்தார். குறிப்பாக திராவிட மாடல், மாநில சட்டம் ஒழுங்கு, முதலீடு ஈட்டுதல் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் விட்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆற்றல் மிக்க தலைமை என்ற வரிகளையும் கவர்னர் தவிர்த்தார். இது சட்டசபையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அச்சிடப்பட்ட உரைக்கு மாறாக கவர்னர் ரவி சில பத்திகளை தவிர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 பக்க விளக்கம் ஒன்றை உடனடியாக சட்டசபையில் வாசித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த விளக்கத்தில் கூறுகையில், ‘கவர்னர் தனக்கு வழங்கப்பட்ட உரையை முழுமையாக படிக்காதது வருந்தத்தக்கது. அவரால் இணைத்து வெளியிடப்பட்ட பகுதிகள் இடம்பெறாது. சபாநாயகரால் படிக்கப்பட்ட தமிழ் உரையே இடம்பெறும் என்று பேரவை விதி 17-ஐ தளர்த்தி தீர்மானத்தை முன்மொழிகிறேன்’ என்று குறிப்பிட்டார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இதற்கிடையே முதல்-அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி பாதியிலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளன. இதற்கிடையே சட்டசபையில் தனது திருத்தப் பேச்சை சபை குறிப்பில் ஏற்றாததால் கவர்னர் ஆர்.என்.ரவி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனது பேச்சை தவிர்க்கும் வகையில் சட்டப்பேரவை விதியை தளர்த்த முடியுமா? என்று அவர் சட்ட நிபுணர்களுடன் கருத்து கேட்டார். அரசமைப்பு சட்டத்தின் 175 மற்றும் 176-வது பிரிவின்படி சட்டசபை கூடி இருக்கும் போது கவர்னர் உரை நிகழத்தும் போதோ அல்லது உரை நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ எம்.எல்.ஏ.க்கள் யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது என்பது விதியாகும். கவர்னர் உரையை தடங்கல் செய்யும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பேரவை விதி 17-ல் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதியைத்தான் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்த்தி, கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளார். இந்த 17-வது விதியை தளர்த்த முடியுமா? என்று கவர்னர் நேற்று கேட்டறிந்தார். சபை குறிப்பில் தனது திருத்தப் பேச்சு இடம்பெறாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை அவர் மூத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்ட ரீதியாக இதில் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

கவர்னர் உரையை தயாரித்து அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்டதும், அதில் சில திருத்தங்களை செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி பரிந்துரைத்துள்ளார். ஆனால் அரசு தரப்பில் இருந்து அந்த திருத்தங்களை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அரசின் கொள்கை முடிவுகளான அந்த வரிகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்துதான் அந்த 6 அம்சங்களை கவர்னர் தனது உரையின்போது வாசிக்காமல் தவிர்த்திருக்கிறார். என்றாலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றின் மூலம் கவர்னரின் உரையை முழுமையாக சபை குறிப்பில் ஏற்றி உள்ளார்.

இதே மாதிரி வேறு மாநிலங்களில் நடந்துள்ளதா? அதற்கு கவர்னர் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் நேற்று கிண்டி ராஜ்பவன் வட்டாரங்களில் ஆய்வு செய்ததாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே சட்டசபையில் நேற்று என்னென்ன நடந்தது என்பது பற்றி டெல்லி மேலிடத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கமாக எழுதி அனுப்பி இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த விளக்கத்தில் அவர் எதையெல்லாம் படிக்காமல் தவிர்த்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட நிபுணர்களின் உதவியையும் கவர்னர் ஆர்.என்.ரவி நாடி இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே பேரவை விதியை திருத்தி கவர்னர் உரையின் தமிழாக்கம் பகுதியை முழுமையாக ஏற்றப்பட்டதை கவர்னர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்துதான் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் அமையும். கவர்னர் சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுகினால் தி.மு.க.வும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேற்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal