”சார், நானே இன்னைக்கு ஓசியில குடிக்க போனேன்… டெய்லி குடிச்சிட்டுத்தான் வண்டியில போறேன்.இன்னைக்கு மட்டும் ஏன் கேசு போடுறீங்க. என் வழக்கு பதிவு செய்தால் நான் பைன் கட்ட காசுக்கு எங்க போவேன்” என்று போதையில் போக்குவரத்து போலீசாரிடம் சாலையில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில், நேற்று இரவு சைதாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது மது போதையில் சாலையில் நாகரீக உடை அணிந்து வந்த இளம் பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி வந்தார். இதை கவனித்த போலீசார் அந்த இளம் பெண்ணை வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அதிகளவில் மது குடித்து இருந்தார். மேலும், அவரால் சரியாக பேச முடியவில்லை.
உடனே, போக்குவரத்து போலீசார் அவரின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். சோதனையில் அவர் 187 விழுக்காடு மது போதையில் இருந்துள்ளார். போதை பெண்: ‘நீங்க என்ன சொன்னீங்க… ஊதுனா வண்டி தரேனு சொன்னீங்க, நான் வந்து ஊதுனேன். ஆனால், இப்ப வண்டியை தர முடியாது என்று சொல்றீங்க. நான் தெளிவாகதான் இருக்கே சார். நான் ஜாக்கிரதையாக போயிக்கிறேன் சார்.. என் வண்டியை மட்டும் கொடுங்க. 20க்கு கி.மீ. வேகத்துக்கு மேல் வேகம் போகமாட்டேன் சார்.
போக்குவரத்து போலீஸ்: ‘நீ ஒழுங்காக சென்றாலும், எதிரே வருபவன் எப்படி வருவான் என்று தெரியாது. இதனால் நீ காலையில் வந்த வண்டியை எடுத்து போங்க என்று கூறி, உங்கள் லைசன்ஸ் மட்டும் கொடுங்க என்று கேட்டனர்.
போதை பெண்: ‘என்ன சொன்னீங்க கடைசியாக, ஒரு பெண்ணிடம் உங்கள் வீரத்தை காட்டிறீங்களா? ஊதினால் வண்டி சாவியை தரேனு சொன்னீங்க இப்ப இப்படி பேசுறீங்க.
போக்குவரத்து போலீஸ்: நீங்கள் லைசன்ஸ் மட்டும் காட்டுங்க மேடம். நாங்கள் உங்களை விட்டுவிடுகிறோம்.
போதை பெண்: லைசன்ஸ் இப்ப என்னிடம் இல்லை. வீட்டில் தான் இருக்கிறது. இது எல்லாம் செல்லாது.. செல்லாது.
போக்குவரத்து போலீஸ்: டிடி விழுக்காடு அதிகமாக இருக்கு மேடம். கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
போதை பெண்: யார் சார் குடிக்காமல் இருக்கா. நான் தினமும் குடித்துவிட்டுதான் போறேன். அப்ப எல்லாம் பிடிக்காமல் இப்ப மட்டும் பிடிக்கிறீங்க. எனக்கு தெரியாது எனக்கு பைன் போட்டீங்கனா… என்னால் பைன் கட்ட முடியாது. என்னிடம் எதுவுமே கிடையாது.
போக்குவரத்து போலீஸ்: இந்தாங்க மேடம் சலான்.
போதை பெண்: என்னால பைன் கட்டமுடியாது. ‘நானே ஓசியில் தான் குடிக்க போனேன்’. யாரை கேட்டு பைன் போட்டிங்க.. சொல்லுங்க. என்ன சொன்னீங்க நீங்க. ஊதுங்க வண்டி தருகிறேன் என்று சொன்னீங்க இப்படி பண்றீங்க. வாங்க சார் ஸ்டேசனுக்கு போகலாம். வாங்க சார். நான் இருக்கிறது எல்லாம் வைத்து தான் நான் சாப்பிடுகிறேன். என்னிடம் ஒன்றும் இல்லை.
கடைசியாக போக்குவரத்து போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் விழி பிதுங்கி நின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.