அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியா..? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லுமா? என்பது பற்றிய தீர்ப்பு இன்னும் ஐந்து தினங்களுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது. அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தனது வாதத்தை தொடர்ந்தார். நேற்றும் வாதாடினார்.

அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விதிமுறைபடி நடைபெறவில்லை. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இந்த பொதுக்குழு அவ்வாறு கூட்டப்படவில்லை. அவைத் தலைவரை வைத்து பொதுக்குழுவை கூட்டினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அப்படி நீக்குவதற்கு முறைப்படி நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கவில்லை.

எனவே ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை எந்த கோர்ட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடரவில்லை. எனவே அந்த பிரச்சினையை இந்த வழக்கில் எழுப்ப முடியாது. 5-ல் ஒரு பகுதியினர் கடிதம் அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்று கட்சி விதிகளில் உள்ளதாக வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பேச முற்பட்டபோது அதற்கு நீதிபதிகள் உங்கள் முறை வரும் போது உங்கள் வாதத்தை தொடரலாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தொடர்ந்து வாதிட்டார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர் என்று வாதிட்டார்.

நேற்று மாலை 4.30 மணி வரை வாதங்கள் நீடித்ததால் விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு தள்ளி வைத்தார். இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியதும் வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்ய உள்ளனர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாட உள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று நிறைவு செய்ய வேண்டும என்று நீதிபதிகள் கூறி உள்ளதால் அ.தி.மு.க. வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு தீர்ப்பில் விடை கிடைத்துவிடும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal