சமீபத்தல் திருச்சியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ‘துணை முதல்வருக்கு நிகரான பொறுப்புகளை கவனித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

இந்த நிலையில்தான் உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டும் என்கிறார்களே… என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் டென்ஷாகி, உடனடியாக காரில் ஏறிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஒரு செங்கல்’ பிரச்சாரத்தை வைத்தே அ.தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் வெளுத்து வாங்கினார் உதயநிதி. அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2021 சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற சமயத்திலேயே உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பார் எனச் சொல்லப்பட்டது. இருந்த போதிலும், அவர் அப்போது அமைச்சராகப் பதவியேற்கவில்லை. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. இருப்பினும், அப்போது எதுவும் நடக்கவில்லை.

இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றே சில வாரங்கள் தான் ஆகும் நிலையில், அவரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தது.

சமீபத்தில் திருச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிறப்புத் திட்ட செயலாக்க துறையை நிர்வகிப்பது என்பது கிட்டதட்ட துணை முதலமைச்சர் பொறுப்பைக் கையாள்வதற்குச் சமமானது எனக் கூறியிருந்தார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, வரவேற்கிறேன்… என்று பேசியிருந்தார் அன்பில். இதற்கிடையே அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட சிலரும் இதேபோன்ற கருத்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மூத்த அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் டென்ஷன் ஆகிவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெறும்.. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு அருமையாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நன்றாகச் செயல்பட்டு வருகிறார்” என்று பாராட்டிப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக மூத்த அமைச்சர்கள் முன்மொழிவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குக் கோபமடைந்த அவர் கோபத்தில் சத்தமாக ‘‘நகருங்கள்’’ என்று சொல்லிவிட்டு காரின் கதவை வேகமாகத் திறந்து காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal