‘அ.தி.மு.க.வின் முகம் நான்தான்’ என ஓ.பி.எஸ். காய்நகர்த்த தொடங்கியிருப்பதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அ.தி.மு.க.வில் 95 சதவீதத்திற்கும் மேல் ஆதரவை வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடித்தத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு திருப்பி அனுப்பிய நிலையில், தாங்கள் தான் உண்மையான அதிமுக என பதிவு செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது.
திமுக ஆளும் கட்சியாக அரசியல் களத்தில் மிக வலுவாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக அவர்களே வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால் பாஜக, பாமக, காங்கிரஸ் என மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக ஆளும் கட்சியை எதிர்த்து வரும் நிலையில், அ.தி.மு.க.வில் இன்னும் அதிகாரப் போட்டி ஓய்ந்த பாடியில்லை.
ஒரு பக்கம் சசிகலா, மறுபக்கம் டி.டி.வி., இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ். என மூன்று அணிகளும் சொற்ப ஆதரவாளர்களை வைத்திருந்தாலும், கட்சி கைப்பற்றத் துடித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருக்கும் நிலையில் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென பாஜக தலைமை தொடர்ந்து இபிஎஸ் தரப்பை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக பாஜக மூலமும், மேலிட பொறுப்பாளர்கள் மூலமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதனை முற்றாக மறுத்து விட்டார். இதன் காரணமாக பாஜக தலைமை இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக வரும் காலங்களில் அவருக்கு எதிரான டெல்லியின் நகர்வுகள் தீவிரமாக இருக்கும் என்கின்றனர்.
இந்நிலையில் ஓபிஎஸ்க்கு சாதகமான சில நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. இதனிடையே தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பது எடப்பாடிபழனிசாமி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அதிமுகவுக்கு எழுதிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
மத்திய சட்டத்துறை சார்பில் எடப்பாடியை பொதுச்செயலாளர் என்றே அழைப்பு அனுப்பிய நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிடவில்லை என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அதிமுகவில் அப்படி யாரும் இல்லை எனக் கூறி அந்த கடிதம் இபிஎஸ் தரப்பால் திருப்பி அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணைய தகவல்களின்படி அப்படிதான் உள்ளது என கூறினார் சத்யபிரதா சாஹு. இந்நிலையில் மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், – இணை ஒருங்கிணைப்பாளர் என்றே கூறி மீண்டும் கடிதத்தை அனுப்பியிருக்கிறது.
இதனால் எடப்பாடி தரப்பு உச்சகட்ட கோபம் அடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடத்தவுள்ள கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த நடைபெறவுள்ள நிகழ்வுகளில் அதிமுகவின் முகமாக தான் இருக்கிறேன் என்பதனை நிரூபிக்க இந்த பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுடன் வைத்திலிங்கமும் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.