திமுக பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகியயோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

திமுக நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் சென்ற போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தியதாகவும், திமுக நிர்வாகிகளை கைது செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பெண் காவலர் புகார் கொடுத்த நிலையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது திமுக நிர்வாகிகள் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகார் மனுவை வாபஸ் பெறுவதாக பெண் காவலர் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal