இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு… முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை ‘செயல்’ பாபுவாக திகழ்ந்து வருகிறார். முதல்வர் மனதில் நினைப்பதை பட்டென முடித்து சாதித்துக் காட்டக் கூடிய வல்லமை படைத்தவர்தான் சேகர் பாபு!
திருச்செந்தூர் கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு,
‘‘உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பக்தர்களின் செல்போனை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு செல்போனிற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். திருச்செந்தூர் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை கோவிலுக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் இயக்கப்படுகிறது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லாதபட்சத்தில் மற்ற பக்தர்களை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளர்ச்சி பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும். பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
திருச்செந்தூர் கோவில் உள் பிரகாரத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கப்படும். அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று விட்டார். வரும் காலங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணங்களை அவர் நிறைவேற்றுவார்’’ இவ்வாறு அவர் கூறினார்.