தமிழ்த் திரையுலகில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது ஆந்திராவில் அமைச்சராக இருப்பவர் ரோஜா! இவருடைய மகளின் படத்தை மார்பிங் செய்து வலைதள வாசிகள் வெளிட்ட சம்பவத்தால், அதிர்ச்சியும், வேதனையையும் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ரோஜா!

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆர் கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படத்தில் முதல் முறையாக அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணியையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும் மகனும் உள்ளனர். இவருடைய திருமணத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வருகை தந்திருந்தார். இதற்காக திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற செல்வமணியிடம், ‘நடிகை ரோஜா எனது மகள் போன்றவர், அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூறியிருந்தார். திருமணமானதும் நடிகை ரோஜா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன் பிறகு அரசியலில் இறங்கினார். அதாவது ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

அக்கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் மிகவும் மனவேதனைப்பட்ட நடிகை ரோஜா, துவண்டு போகாமல் துணிந்து நின்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து நகரி தொகுதியின் எம்எல்ஏவானார். அப்போது ஆந்திர அமைச்சரவையில் எதிர்க்கட்சியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் இருந்தது. அதில் எம்எல்ஏ ரோஜா தெலுங்கு தேசம் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இதையடுத்து அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதற்காக நடிகை ரோஜா தீவிர பிரச்சாரம் செய்ததை யாராலும் மறுக்க முடியாது. இதனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட 3 ஆண்டுகள் கழித்து நடிகை ரோஜா ஆந்திர அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். அவருக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. நடிகை ரோஜா நகரி தொகுதி மக்களுக்கு நன்மை செய்வதற்காக பல மெட்ரோபாலிட்டன்கள் இருந்த போதிலும் நகரி தொகுதியிலேயே வீட்டை கட்டி அங்கேயே வசித்து வருகிறார்.

பொதுமக்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிகிறார். தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ் பாடபுத்தகம் வேண்டும் என எம்எல்ஏவாக இருக்கும் போதே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்து பாடபுத்தகங்களையும் பெற்றார். இந்த நிலையில் தனது மகள் அன்சுமாலிகா, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜாவின் மகளின் புகைப்படத்தை யாரோ மர்ம நபர்கள் மார்பிங் செய்து மிகவும் மோசமான நிலையில் வெளியிட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் தனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து மர்ம நபர்கள் வெளியிட்டுள்ளனர். நான் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் என் குடும்பத்தினர் மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்புவது வருத்தம் அளிக்கிறது. இதனால் என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இது போன்ற விஷயங்கள் பிரபலங்களுக்கு நடப்பது சகஜமே என கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal