முழு தரத்துடன் கூடிய முழு கரும்பை வழங்கவேண்டும் என்பதோடு, கரும்பை எவ்வாறு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது!
பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணத்துடன் முழு கரும்பு கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் கரும்புகளை கொள்முதல் செய்வதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி 1 கரும்புக்கு போக்குவரத்து செலவு உள்பட அதிகபட்சமாக 33 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்று கூட்டுறவு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (வெட்டு கூலி, விவசாயிகளுக்கு வழங்கும் தொகை, ஏற்றி இறக்கும் செலவு உள்பட) அதுமட்டுமின்றி பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும். நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக்கூடாது.
அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பில் இருந்து எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது. கரும்பு கொள்முதல் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை குழுக்கள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கரும்பு கொள்முதல் தேவையான குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் செய்யும் போது சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் இருந்து ஒட்டுமொத்த கொள்முதலையும் மேற்கொள்ளக் கூடாது. மாறாக அந்த கிராமம் முழுவதிலும் பரவலாக கரும்பின் தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக்கூடாது. கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மட்டுமே வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
கரும்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் எதிர்வரும் 2023 ஜனவரி 9-ந்தேதியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். எந்தந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் அது தேவையற்ற புகார்களுக்கு வழிவகுக்கும். கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட கலெக்டர்களே பொறுப்பு என்றும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனித்து அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.