ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகளைக் கேட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. இதன் காரணமாக, மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கிகரித்துள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி இருப்பதால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அந்த கடிதத்தை திரும்ப பெற வேண்டும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதத்தை அனுப்ப வேண்டும் என ஓபிஎஸ் அணி, சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

மத்திய அரசின் சட்ட ஆணையம் எழுதிய கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், அதுகுறித்த விவாதங்கள் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழை, எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியிருந்த நிலையில், அதில், இடைக்கால பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்னும் தீர்ப்பு எதுவும் வராத நிலையில், தேர்தல் ஆணையம், எடப்பாடி அங்கீகரித்து விட்டதா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு சார்பில் இப்போது கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான முடிமம் ராமசாமி ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டிதான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

அதாவது, ‘‘எடப்பாடி பழனிசாமியே தன்னை, இடைக்கால பொது செயலாளர் என்றுதான் குறிப்பிட்டு வருகிறார். அவரே அப்படி குறிப்பிடும்போது, இவர்கள் ஏன் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட வேண்டும்? யாருமே சொல்லாத சொல்லை, சொல்ல வேண்டிய அவசியம் ஏன் மத்திய அரசுக்கு வந்தது? அனுகூல சத்துருவாக மாற வேண்டிய அவசியம் என்ன? முதலில் அனுகூலமாக இருந்து பிறகு, சத்துருவாக மாறுகிறதா? சட்டப்பிரச்சனை சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனால் அதையும் மீறி மத்திய அரசின் சட்டத்துறை இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது.

சட்டத்துறை சுப்ரீம்கோர்ட்டுடன் மோத தயாராகிவிட்டதா? இதனால் கோபமடைந்து, எடப்பாடி பழனிசாமி மீது, உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும் என்று சட்டத்துறை நினைக்கிறதா? இந்த கடிதத்தில் பெருமைப்பட ஒன்றுமில்லை.. சந்தோஷப்பட ஒன்றுமில்லை.எப்போதுமே சட்டத்துறைக்கு எதிராகத்தான் உச்சநீதிமன்றம் செயல்படும். காரணம், மத்திய அரசு, சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். சட்டத்தை பாதுகாக்க மட்டும்தான் மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறதே தவிர, சட்டத்தை நிலைநாட்டுகிற உரிமை சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே உண்டு. பொதுச்செயலாளர் என்று கடிதத்தில் மத்திய அரசு குறிப்பிட காரணம், சுப்ரீம் கோர்ட் எடப்பாடிக்கு எதிராக திரும்பட்டும் என்பதால்தான்’’ என்றார்.

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்பது போல, சட்ட ஆணையத்தின் கடிதமும் யோசிக்க வைக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal