டெல்லியில் முகாமிட்டிருக்கும் தம்பிதுரையின் காய் நகர்த்தல்களால் கதிகலங்கியிருக்கிறாராம் ஓ.பி.எஸ்.!

அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடியின் கருத்தை அறியும் வகையில் அவருக்கு கடிதம் அனுப்பியது மத்திய அரசின் சட்ட ஆணையம். அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது எடப்பாடிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில்தான் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி தரப்பை குஷியில் ஆழ்த்தியது. இது கிட்டத்தட்ட எடப்பாடியை தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகிறது. உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு விசாரணை நடக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எடப்பாடிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு சென்றுள்ளது. அந்த வகையில் அதிமுகவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. இதில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் அழைப்பு சென்றுள்ளது. அதாவது அதிமுகவில் இருந்து வேறு யாருக்கும் அழைப்பு செல்லவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எடப்பாடிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதை உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி வாதம் வைக்கவும் வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. நாங்கள்தான் உண்மையான அதிமுக. எடப்பாடிதான் பொதுச்செயலாளர். அதனால் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ-.பி.எஸ். தனது மகன் ரவீந்திர நாத் எம்.பி. மூலம் விசாரணையில் இறங்கியிருக்கிறார். அப்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கும் முடிவை 2019-ல் எடுத்திருந்தது மத்திய அரசு. தேசிய சட்ட ஆணையத்தின் மூலம் இத்தகைய கருத்தினைக் கேட்கவும் முடிவு செய்து அது குறித்த ஒரு கடிதத்தை தயாரிக்கவும் சொல்லியிருந்தது மத்திய அரசு. அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கும் அந்த கடிதமும் தயாரிக்கப்பட்டது. ஆனால், 2019-ல் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை. கிடப்பில் வைக்கச் சொன்னது மத்திய அரசு. தற்போது அந்த கடிதத்தை அரசியல் கட்சிகளுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளனர்.

அந்த வகையில், அதிமுக கட்சிக்கு எந்த முகவரிக்கு அனுப்புவது என சட்ட ஆணையத்தின் பிரிவு அலுவலர்களுக்கு ( செக்சன் ஆஃபிசர்ஸ்) தெரியாததால், அதிமுக தம்பிதுரையிடம் கேட்டுள்ளனர். அவரும், ‘எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச்செயலாளர்’ என்று தெரிவித்து கட்சி அலுவலக முகவரியை சொல்லியிருக்கிறார். அதிமுகவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள் செக்சன் அலுவலர்களுக்கு தெரியாததால் தம்பிதுரை சொன்னதை அப்படியே பிரிண்டு செய்து அனுப்பி வைத்து விட்டனர்” என்று கூறி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது எல்லாம் இவர்களுக்கு தெரியாது. என்ன பிரச்சனை நடக்கிறது என்பதே தெரியாது. எம்பி தம்பிதுரை டெல்லியில் அதிகாரிகளுடன் தொடர்புள்ள இருப்பதால் அவரிடம் கேட்டு, அவர் சொன்னதை அப்படியே கடிதமாக அனுப்பியுள்ளனர். டெல்லியில் இருந்து கொண்டு எடப்பாடிக்கு சாதகமாகவும், ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகவும் தம்பிதுரை நகர்த்தும் காயால் கதிகலங்கிப் போயிருக்கிறாராம் ஓ.பன்னீர்வெல்வம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal