உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானபோது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன… ‘உதயநிதி தனது செயல் மூலம் பதிலடி கொடுப்பார்’ என திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதற்கு ஒரு படி மேலே போய், ‘துணை முதல்வருக்கு நிகராக பணியாற்றி வருகிறார்’ என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கிறார்

இந்த நிலையில்தான் ‘ரெட் ஜெய்ண்ட்’ மூவிஸ் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமா உள்ளே நுழைந்து, பின்னர் நடிகராகவும்… திரைப்பட விநியோகஸ்தராகவும்… மாறியவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு,வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மாறினார். எனினும் தொடர்ந்து திரைப்படங்களிலும், திரைப்பட தயாரிப்பிலும், கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை’ அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அமைச்சராக மாறிய பின்னர், தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால்… இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்திலிருந்து அதிரடியாக விளக்குவதாக அறிவித்தார். இது உதயநிதி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உதயநிதி இந்த படத்தில் இருந்து விலகிய பின்னர், தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாக்கின.

மேலும் உதயநிதி அடுத்ததாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தலைமை பொறுப்பில் இருந்தும் விலக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே அவருக்கு பதில், அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்றும், திரைப்படங்களிலும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி என்பதற்கு பதிலாக கிருத்திகா உதயநிதி என்கிற பெயர் மாற்றம் பெறும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து தற்போது வரை, எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal