ஜெயலலிதா என ஒருமையில் பேசிய தஞ்சை மேயர் – கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷனும், முதல்வர் மீது பாலியல் வழக்கு இருப்பதாகவும் அதிமுக புகார். இதனால் திமுக அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட காரசார விவாதத்தால் மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

தஞ்சை மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது, கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் வியாபாரிகள் 46 கடைகளை திருப்பி கொடுத்து உள்ளார்கள் என தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மேயர் சண்.ராமநாதன், அதற்கு பதில் சொல்லாமல் ஜெயலலிதா ஏ1 குற்றவாளி தண்டனை பெற்றவர் என கூறியதால்,

ஆத்திரம் அடைந்த அதிமுக மற்றும் அமமுக உறுப்பினர்கள் மறைந்த முதல்வர் கருணாநிதி மீது ஊழல் குறித்து சர்க்காரியா கமிஷன் விசாரணை நடத்தியது என்றும், தற்போதைய முதல்வர் மீது பாலியல் வழக்கு இருந்ததாகவும் கூறியதால் அதிமுக திமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி பாலியல் வழக்கு உள்ளது என்று தவறான தகவலை கூறக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
விபரீதத்தை புரிந்து கொண்ட மேயர் சண்.ராமநாதன் திடீரென எழுந்து மாமன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால், மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒருமையில் பேசிய மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தஞ்சையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிமுக, உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal