முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நண்பருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

‘அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்… அச்சாரம் போட்ட அன்பில் மகேஷ்’ என ‘தமிழக அரசியல்’ இதழில் அப்போது செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக திண்டுக்கல், சிவகங்ககை, கோவை என அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதே போல் இன்றைய தினம் மலைக்கோட்டை மாநகரான மணப்பாறையில் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க திருச்சி வருகை தந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்திருந்தார். மலைக்கோட்டை மாநகரே வியக்கும் அளவிற்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்து அசத்தியிருந்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடம் வரையில் பிரம்மாண்ட வரவேற்பு முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. அதே போல், அமைச்சர் உதயநிதிக்கு மயிலாட்டம்… ஒயிலாட்டம்… என பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்து அசத்தியிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி மாநகரமே மலைக்கும் அளவிற்கு அன்பில் மகேஷ் கொடுத்த வரவேற்பு பற்றி அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், கலைஞர் ஒருமுறை திருச்சிக்கு வந்திருந்தபோது, காவிரியாற்றில் வெள்ளம் அதிகமாக வந்தபோது, கலைஞரை தன் தோளில் சுமந்து கரையைக் கடந்தவர்தான் அன்பில் தர்மலிங்கம். இது கதையல்ல… வரலாறு-…. திருச்சியில் இன்றைக்கு ஆலமரம் போல் தி.மு.க. பரவி படர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அன்பில் தர்மலிங்கம். அடுத்து அவரது வாரிசான அன்பில் மகேஷ் களத்தில் இறங்கிய இன்னும் கட்சியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால், இப்படி வரவேற்பு கொடுப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை’’ என்றனர்!

ஒரே கட்சி… ஒரே கொடி… என அரசியல் வாதிகள் யாரும் நீடித்து நிற்பதில்லை. ஆனால், மூன்றாம் தலைமுறையாக கறுப்பு சிவப்புக் கொடியை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal