‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை ‘பொதுச்செயலாளர்’ என குறிப்பிட்டு அ.தி.மு.க.வின் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் அண்மையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மத்திய அரசு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுத்தது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சியினர். தேர்தல் வல்லுநர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்க இந்திய சட்ட ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக வரும் 16ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளதை அடுத்து மத்திய அரசு அவரை அங்கீரித்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், டி.டி.வி. அணியில் இருக்கும் சில நிர்வாகிகள் மற்றும் ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி அணியில் இணைய தூதுவிட்டு வருகிறார்களாம்!