தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மா.செ.க்கள் இன்று சென்னை வந்தனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் நிர்வாகி ஒருவரிடம் ரூ.1 லட்சம் ‘அபேஸ்’ செய்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் உச்சி மாகாளி என்பவரும் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தார். இவரது பையில் இருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் யாரோ இந்த பணத்தை திருடியுள்ளனர்.
இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசில் உச்சி மாகாளி புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம்தான் அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.