சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

2022-ம் ஆண்டு முடிந்து 2023-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகரம் தயாராகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களைகட்டி உள்ளன. வருகிற 31-ந்தேதி மாலையில் தொடங்கி ஜனவரி 1-ந்தேதி அதிகாலை வரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக தேவையான முன்ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்கொண்டுள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் மூடப்பட உள்ளன. சுமார் 500 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றி வருவார்கள்.

மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். புத்தாண்டு அன்று வாழ்த்து சொல்வதாக கூறிக்கொண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

புத்தாண்டு அன்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அந்தந்த பகுதி துணை கமிஷனர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் இதற்காக தனி பாதுகாவலர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். நீச்சல் குளங்கள் இருக்கும் பகுதியை மூடி வைத்து தேவையான அளவுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal