கட்சிக் கொடி… கட்சி வேஷ்டி பயன்படுத்துவது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், ‘எடப்பாடிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என ஓ.பி.எஸ். எச்சரித்த சம்பவம்தான் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் சென்னை வேப்பேரியில் நடந்தது.

இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இதுபோல கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்று கூறி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், ‘‘கட்சியின் பெயரையும், முத்திரையையும் பயன்படுத்த எந்த உரிமையும் உங்களுக்கு கிடையாது. அதனால், சட்டவிரோத இந்த அறிவிப்பை உடனே திரும்ப பெறவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வக்கீல்கள் ராஜலட்சுமி, கவுதம் சிவசங்கர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:- ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். அடிப்படை உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கவும் தங்களுக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) அதிகாரம் இல்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசே சட்டவிரோதமானது.

அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைப்பது தொடர்பாக, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட கருத்துகளை கீழ் கோர்ட்டு கருத்தில் கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. மேலும், கட்சி அலுவலகம் மீதான சட்டப்பூர்வமான உரிமைகளை இன்னும் கோர்ட்டு தீர்மானிக்காதபோது, முகவரியை பயன்படுத்தியது குறித்து தாங்கள் கூறும் குற்றச்சாட்டும் தவறானது. கட்சியின் அலுவலகம் முகவரி முத்திரை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்தக்கூடாது என்று தடை எதுவும் இல்லை.

தற்போது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது செல்லாது. அதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பரிசீலனையில் உள்ளது. நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) தான் கட்சியின் விதிகளுக்கு முற்றிலும் முரணாகவும், கட்சி நிறுவனர் எண்ணங்களுக்கு எதிராகவும் செயல்படுகிறீர்கள். எனவே, கட்சி பொறுப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக இனிமேலும் இதுபோல தேவையற்ற கருத்துகளை தெரிவித்தால் தங்கள் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal