ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும், பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று சென்னையில் வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் விளம்பரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்!

சென்னையில் பஸ், ரெயில் நிலையங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஓட்டல் விளம்பரங்கள் தொடங்கி அனைத்து விதமான விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரெயில் நிலைய பாலங்களுக்கு கீழேயும் இது போன்ற டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய பாலத்துக்கு கீழே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளம்பரம் ஒன்று ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. ரூ.1000 கொடுத்தால் எந்த பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம் என்பது போன்ற அதிர்ச்சியூட்டும் விளம்பரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய ஓட்டல் ஒன்றின் சார்பிலேயே இந்த டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டிருந்தது.

அதில் தான் இந்த விளம்பரமும் ஒளிபரப்பானது. இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். சென்னையில் விபசாரத்துக்கு இவ்வளவு வெளிப்படையாகவா அழைப்பீர்கள் என்றும், என்னப்பா நடக்குது சென்னையில்? என்றும் விதவிதமான விமர்சனங்கள் எழுந்தன. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

உடனடியாக அந்த அறிவிப்பு பலகையை அகற்றவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விளம்பர பலகையில் வெளியான விளம்பரத்தை ஓட்டல் ஊழியர் ஒருவரே திட்டமிட்டு ஒளிபரப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஓட்டலில் சட்ட விரோதமாக எந்த செயல்களும் நடைபெறவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விளம்பரங்கள் இனி பொது இடங்களில் வெளியாகாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal