தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி உயிரியல் மையத்தின் இயக்குநர் விளக்கியிருக்கிறார்.

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர் வினய் கே.சந்திகூரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘பொதுவாக உருமாறிய கொரோனாக்கள் அனைத்தும் கவலை அளிக்கக்கூடியவைதான். அவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி செயல்படும். தடுப்பூசி போட்டவர்களை தாக்கும். ஒமைக்ரானால் தாக்கப்பட்டவர்களை கூட தாக்கும். நாம் ‘டெல்டா’ என்ற மிக மோசமான கொரோனா அலையையே பார்த்து விட்டோம். உடனே தடுப்பூசி போடும் பணியை தொடங்கினோம். ‘ஒமைக்ரான்’ வந்தது. பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். இப்போது வந்துள்ள பி.எப்.7 என்ற புதியவகை கொரோனா, டெல்டா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த அளவுக்கு நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளோம். மற்ற வைரஸ்களின் தாக்குதலுக்கு ஆளாகி, நாம் ஏற்கனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று விட்டோம்.

எனவே, இப்போது சீனாவில் ஏற்படுத்தியது போல், இந்தியாவில் பி.எப்.7 கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. எல்லா வழிகளிலும் நாம் வேறு பட்டவர்கள். சீனாவில் ‘பூஜ்ய கொரோனா’ கொள்கையை பின்பற்றியதுதான் தற்போதைய கொரோனா பரவலுக்கு காரணம். அங்கு தடுப்பூசி குறைவான அளவுக்கு போட்டிருப்பது நோயின் தீவிரத்தை அதிகரித்து விட்டது. இந்தியாவில் வயதானவர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.

ஆனால் சீனாவில் அப்படி தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வரவில்லை. இந்தியாவில் கொரோனா அலை வரும் என்றோ, வராது என்றோ தற்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் உடனே அலை வரும் என்பதற்கான பீதியான அறிகுறி தெரியவில்லை.

அதே சமயத்தில், இந்தியாவில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, சிகிச்சை போன்ற கட்டமைப்பு வசதிகள் தாராளமாக உள்ளன’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal