ரேஷன் கடை பணிக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பதவிகளை உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழந்தூர் நியாய விலைக் கடையில், எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், அனிதா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘விற்பனையாளர் பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியுடையோர் ஏராளமாக உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா என்பவர் எந்த தேர்வு நடைமுறையும் பின்பற்றப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, புகார் தெரிவித்தபோது, ரூ.5 லட்சம் கொடுத்து இப்பணியை பெற்றதாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து நான் கொடுத்த புகாருக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள், அனிதா என்ற பெயரில் எந்த விற்பனையாளரும் பணியாற்றவில்லை என்று கூறியுள்ளனர். எனவே, நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்களை, முறையான தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க உத்தரவிட வேண்டும். அனிதாவை பணியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal