பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தாலும், கரும்பு விவசாயிகளும் ‘கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லையே’ என்ற ஆதங்கத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் 2500 ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். 2023ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வரும் மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC என்று ரேசன் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் PHH என்று உள்ள (Priority Household) ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். PHH-AAY என்று உள்ள Priority house hold- Antyodaya Anna Yojana ரேஷன் அட்டை தாரர்களுக்கு 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். NPHH என்று உள்ள Non Priority Household என்ற அட்டைதாரர்கள் உள்பட இந்த 3 வகையான ரேசன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும்.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேலே குறிப்பிட்டுள்ள 3 வகையான PHH, PHH-AAY, NPHH அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிகிறது. NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். NPHH-NC ரேஷன் அட்டைதாரர்களுக்கு எந்த பொருளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal