சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வி.கே.சசிகலா ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார். அப்போது, கேக் வெட்டி, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, 100 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சசிகலா முதியோருக்கு உணவு பரிமாறினார்.

பின்னர் நிருபர்களிடம், வி.கே.சசிகலா கூறியதாவது:-

‘‘பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரையும் ஓரணியில் இணைப்பேன். என்னால் நிச்சயமாக முடியும். இருவரும் (எடப்பாடி பழனிசாமி, -ஓ.பி.எஸ்) தனித்தனியாக இருப்பதால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள். நான் எல்லோருக்கும் பொதுவாக தான் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒரு தாய் எப்படியோ அதுபோல தான் செயல்படுகிறேன்.

அ.தி.மு.க. தொண்டர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து, வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறேன். எனக்கென்று தனி ஆட்கள் கிடையாது. ஒருதாய் போல்தான் எல்லோரையும் பார்க்கிறேன். நான் இருக்கும் வரையில் தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள். எல்லோரையும் இணைக்கும் முயற்சியை தொடங்கி விட்டேன். அது நடந்து வருகிறது. தனக்கு பிறகு யார் அ.தி.மு.க.விற்கு தலைமை பொறுப்பில் இருந்தால் சரியாக இருக்கும் என்று ஜெயலலிதாவுக்கு தெரியும். அதற்கான முயற்சியும், அப்போதே நடந்துகொண்டு தான் இருந்தது. அதற்குள் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மறைந்து விட்டார்.

பெங்களூர் சிறைக்கு நான் செல்லும் முன்பு, அதிமுகவை ஆட்சியில் அமர வைத்து விட்டு தான் சென்றேன். அ.தி.மு.க. கட்சியை யாராலும் அசைக்க முடியாது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் இருந்து நான் பெங்களூரில் சிறையில் இருக்கும்போது, மூன்று நிபந்தனைகளுடன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினார்கள். அதில் ஒன்று நேரில் வர வேண்டும் அல்லது வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதில் ஒன்று எழுத்து பூர்வமாக நான் அனைத்து விளக்கமும் அளித்து விட்டேன்.

அ.தி.மு.க.வில் எத்தனை பிரிவுகளாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்றிணைவார்கள். வருகிற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம். நான் பயந்துகொண்டு ஓடி ஒளிகிற ஆள் இல்லை. ஒரு வீட்டில் 10 பிள்ளைகள் இருந்தாலும் வீட்டிற்கு தாய் ஒன்று தானே? ஒருவரை எதிர்க்க வேண்டும் என்றால் நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஒரு பெண் சிங்கமாக இருந்தேன்.

கருணாநிதி எங்களுக்கு செய்யாத தொந்தரவா? அந்த தொந்தரவுகளை நாங்கள் தாங்கி 2 பெண்மணிகளும் சாதித்து காட்டினோம். எதிர்த்து நின்று நாங்கள் போராடினோம். எங்களுக்கு ஆட்சியை கொடுங்கள் என்று மக்களிடம் போய் கேட்டோம். நாங்கள் சண்டையிடுவதற்கு பயந்து முதுகுக்கு பின்னால் இருந்து போராடியது கிடையாது. நானும், ஜெயலலிதாவும் அப்படிதான் இருந்தோம். அதனால் தான் தமிழக மக்களுக்கு நிறைய நல்ல காரியங்களை செய்ய முடிந்தது. இப்போது எனது எண்ணமும் அதுதான்.

ஜெயலலிதாவுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் நான் தெளிவாக உள்ளேன். அதை தமிழக மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். எய்ம்ஸ் டாக்டர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் கொடுத்த டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், எங்களது அரசு டாக்டர்களும் இருந்தனர். அவர்கள் தினமும் ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி அறிக்கை கொடுத்தனர். அப்படி இருந்த போதும் இதில் மறைக்க ஒன்றுமே இல்லையே.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்த வெளிநாட்டு டாக்டர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லட்டுமா என்று அவரிடமே கேட்டனர். அதற்கு ஜெயலலிதா வேண்டாம் என்று மறுத்து விட்டார். எங்களுக்கு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆசை இருந்தது. ஆனால் அவர் ரொம்ப தெளிவாக இங்கே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள். எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது என்று சொல்லி விட்டார். அவரது சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவர் டி.வி. பார்த்தார். எல்லோரிடமும் நன்றாக பேசினார். நர்சுகளிடமும் அம்மா அன்பாக பழகினார்.

டிசம்பர் 19-ந் தேதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து செல்ல நாள் பார்த்து இருந்தோம். அதையொட்டி ஜெயலலிதா எல்லோருக்கும் பரிசு கொடுக்க வேண்டும் அதற்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்றார். நாங்கள் நகைக்கடையில் இருந்து வரச்சொல்லி எல்லோருக்கும் நகையை பார்த்து அவரே தேர்வு செய்தார். இத்தனை செட் எங்களுக்கு செய்து கொடுங்கள் என்பது வரை பேசினோம். டிசம்பர் 15-ந் தேதி எங்களுக்கு டெலிவரி கொடுக்க வேண்டும். அதை ஜெயலலிதா கையால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டு இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை!

தி.மு.க. ஆட்சி 20 மாதங்களாக நடக்கிறது. இன்னும் 4 மாதம் வந்தால் 2 வருடங்கள் பூர்த்தி செய்கிறார்கள். இனி பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதில் 3 மாதங்கள் அரசாங்கம் எந்த வேலையையும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் அறிவிக்க முடியாது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 3 மாதங்கள் போய்விடும். மொத்தம் 6 மாதங்கள் போய்விடுகிறது. அப்போது மக்களுக்கு எதை செய்ய வேண்டுமானாலும் 4 வருடத்துக்குள்தான் செய்ய வேண்டும். அதற்கு ஏற்பதான் திட்டம் வகுக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம். நீங்கள் இதை செய்யுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் நீங்களாகவே வாக்குறுதி கொடுக்கிறீர்கள். வாக்குறுதி கொடுத்ததை செய்ய வேண்டுமல்லவா? டிவியில் விளம்பரப்படுத்தினால் அது மட்டும் ஆட்சி கிடையாது. மக்களுக்கு போய் சேர வேண்டும். அதை செய்யவில்லை என்றால் மக்களே முடிவு செய்வார்கள்.

நான் 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் வந்தேன். அப்போது ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அப்போது பெண்கள் வெளியில் வருவது ரொம்ப கஷ்டம். அந்த சமயத்தில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பட வேண்டிய கஷ்டத்தை பட்டு விட்டோம். அதையெல்லாம் மீறிதான் ஆட்சிக்கு வந்தோம். பெண்களுக்கு அம்மா நல்லது செய்வார். நான் தீபா உள்பட யாரையும் திட்டுவதில்லை. அறிவுபூர்வமான விஷயங்களை எடுத்து செல்லுவேன். உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். இதை செய்யுங்கள் என்பேன்’’ இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்றத் தேர்தலுக்குள் பிரிந்து சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வை ‘ஒன்றிணைப்பேன்’ என்ற சசிகலாவின் சபதம் நிறைவேறுமா…? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal