தமிழகத்தல் பா.ஜ.க. ‘ஆபரேஷனை’ ஆரம்பித்து விட்டது என்கிறார்கள், தமிழ அரசியல் களத்தின் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருபவர்கள்!

வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ‘ஆபரேஷன் தாமரை’ என்ற அதிரடியில் மத்திய விசாரணை ஆணையங்களை பா.ஜ.க. பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.

கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று கூட சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போதே பதில் அளித்து இருந்தார். அதில், அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா? ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடினாரே.. அவர் தானே? என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்கக் முடிய வில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்?. தன்னிச்சையாக செயல்பட கூடிய அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் அண்ணாமலை சொன்னது போலவே தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனது பார்வையை திருப்பி உள்ளது. அதன்படி, திமுக எம்பி, துணை பொதுச்செயலாளர் ஆ ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 &- 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஆ ராசா இருந்த போது இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில் இந்த நிலம் வணக்கப்பட்டதாகவும்.

தனது நண்பர்கள், உறவினர்கள் நிறுவனங்கள் மூலம் பினாமி நிறுவனங்களை உருவாக்கி இந்த நிலத்தை ஆ. ராசா வாங்கியதாக இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமலாக்கத்துறை தமிழ்நாடு பக்கம் தலையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் கடந்த 2002-&2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அமலாக்கத்துறை இடைக்கால தடை நீக்கப்பட்டதும் விசாரணையை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல், ஐ.பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றார், அங்கும் விசாரணையை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டது. அவருக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த தொடர் வழக்குகள் நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வினருடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஜே.பி.நட்டா வருகிற 27-ந்தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டு வந்து வரவேற்கின்றனர். வரவேற்பை ஏற்று கொள்ளும் ஜே.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காரமடைக்கு செல்கிறார். காரமடை வி.பி.ஆர். மஹாலில் பா.ஜ.க.வின் நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். கூட்டத்தில் அவர், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது, தொகுதிகளில் பூத் கமிட்டியின் நிலை, மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறுவது என பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்க உள்ளார்.

கோவையில் ஒரு (ஆ.ராசா சொத்துக்கள் முடக்கம்) ஆபரேஷனை முடித்துவிட்டு ஆய்வுக்கூட்டத்திற்கு வருகிறார் ஜே.பி.நட்டா என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்! பா.ஜ.க.வின் ‘ஆபரேஷனை’ துணிந்து தாக்குப்பிடிப்பார்களா? அல்லது தஞ்சமடைவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal