கள்ளக்காதல் மோகத்தால் நாட்டில் பலர் தவறான பாதைகளில் சென்று தற்கொலை அல்லது கொலை செய்து விடுவதுதான் வேதனை அளிக்கிறது!

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் (வயது 32), அதே ஊரைச் சேர்ந்த சகாய ஷாமினி (29) என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். ஆனால் இவர்களது கள்ளக்காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய கள்ளக் காதல் ஜோடி நேற்று ஆரல்வாய் மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன்பு கள்ளக்காதலனுடன் வாழ நினைத்து வீட்டில் இருந்து புறப்பட்ட சகாய ஷாமினி தனது 7 வயது மற்றும் 3 வயது மகன்களையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். காரில் பல இடங்களுக்குச் சென்ற அவர்கள், நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி வந்து இரவில் தற்கொலை செய்து உள்ளனர்.

கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்த சகாய ஷாமினி, முன்னதாக தனது 2 மகன்களுக்கும் உணவு கொடுத்து விட்டு காரில் வசதியாக படுக்க வைத்துள்ளார். 2 பேரும் தூங்கியதும் அவரும் ஆரோக்கிய சூசைநாதனும் அதிகாலை 2 மணிக்கு காரில் இருந்து வெளியே வந்துள்ளனர். தரையில் போர்வை விரித்து அதில் உட்கார்ந்த இருவரும் அப்படியே தரையில் சாய்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. இதன்மூலம் அவர்கள் காருக்குள்ளேயே விஷம் சாப்பிட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இந்த சூழலில் தாய் இறந்தது தெரியாமல் அவரது 2 மகன்களும் காலையில் எழுந்து விளையாடியதும், அம்மா எங்க….எப்ப வருவாங்க… என்று கேட்டு அழுவதுமாக இருப்பது அனைவரையும் கலங்க வைத்தது. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை விவகாரம், அவர்களது சொந்த ஊரான கடியபட்டணத்தில் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சகாய ஷாமினியின் உறவினர்கள் கூறுகையில், ‘‘அன்பான கணவன், அழகான குழந்தைகள் என நல்ல வாழ்க்கை அமைந்தபோதும் அதனை அவர் கெடுத்துக் கொண்டார். தற்போது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றுவிட்டார் என்றனர். கள்ளக்காதலில் சிக்கிய சகாயஷாமினி, ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார்.

ஆனால் சில நாட்களில் அவர் வீடு திரும்பிய நிலையிலும் கணவர் ராஜேஷ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அதனை மறந்து கடந்த 17-ந் தேதி மீண்டும் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய சகாய ஷாமினி, தற்போது வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார்’’ என்றும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதற்கிடையில் 2 பேருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:- ஆரோக்கிய சூசை நாதனும், சகாய ஷாமினியும் ஓரே ஊர் என்பதால் முதலில் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் சகாயஷாமினியின் கணவர் ராஜேஷ் வெளிநாட்டு வேலைக்குச் சென்றார். அந்த நேரத்தில் தான் சகாய ஷாமினிக்கும் ஆரோக்கிய சூசை நாதனுக்கும் உண்டான பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை ஆரோக்கிய சூசைநாதனுக்கு, சகாய ஷாமினி கொடுத்ததாகவும், அதை வைத்து தான் அவர் கார்கள் வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆரோக்கிய சூசைநாதனுக்கும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே கொம்புத்துறை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி உள்ளது. சில ஆண்டுகளில் கணவரின் நடத்தை பற்றி தெரியவந்ததால் அந்தப்பெண் தனது பெற்றோர் வீட்டிற்கே சென்றுவிட்டார். அதன்பிறகு கள்ளக்காதலியுடன் பழக்கத்தை ஆரோக்கிய சூசைநாதன் அதிகரித்துள்ளார்.

இந்த நேரத்தில் தான் வெளிநாட்டில் இருந்து சகாயஷாமினியின் கணவர் ராஜேஷ் ஊர் திரும்பிவிட்டார். எனவே கள்ளக்காதலை தொடர முடியாத ஜோடி தற்கொலை முடிவை எடுத்துள்ளது. நேற்று 2 பேரின் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் உடல்களை வாங்க சகாய ஷாமினியின் கணவர் ராஜேஷ் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். ஆனால் ஆரோக்கிய சூசைநாதன் தரப்பில் யாரும் வந்ததாக தெரியவில்லை. அவரது மனைவிக்கு போலீசார் தகவல் கொடுத்தபோதும், சரியான பதிலை தரவில்லை என கூறப்படுகிறது.

மேலும் தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் தான், அவரை பிரிந்து வந்ததாக அவர் கூறியதாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal