வருகிற பொங்கல் பண்டிகைக்குள் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி ஆதரவாக தீர்ப்பு வரும் என அவரது எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற விடமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயருடன் ஆதரவாளர்களை திரட்டி தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது அணியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளையும் நியமித்துள்ள ஓ.பி.எஸ். நேற்று அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஓ.பி.எஸ். உள்பட முன்னணி நிர்வாகிகள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் உள்ளதா? என்று ஓ.பி.எஸ். சவால் விடுத்தார். தாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகாரம் செய்யும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது. அ.தி.மு.க.வின் 2021&-2022ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் தங்களது இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது.

இதனை மிகப்பெரிய அங்கீகாரமாக எடப்பாடி அதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் வக்கீலுமான ஐ.எஸ்.இன்பதுரை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இனியெல்லாம் ஜெயமே” என்று குறிப்பிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் கையெழுத்திட்ட 2021-&2022ம் ஆண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றே அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்க வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், பொங்கலுக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது’’ என்றனர்.

எடப்பாடியார் தரப்பிற்கு பொங்கல் பண்டிகை வெகுசிறப்பாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal