உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று முதன் முறையாக திண்டுக்கல் செல்வதற்காக மதுரை விமான நிலையம், வந்த அவருக்கு மாஸான வரவேற்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மதுரை உடன் பிறப்புக்கள்!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக கடந்த வாரம் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தனது முதல் வெளியூர் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் சென்றிருக்கிறார். இதனிடையே திண்டுக்கல் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை ஏர்போர்ட் வந்திறங்கிய அவருக்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதே போல் முதல்வருக்கு பாதுகாப்பு எப்படி அளிப்பார்களோ, அதே போல் போலீசாரும் குவிந்திருந்தனர்.
மதுரை மாவட்ட திமுக செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகிய மூவரும் வளைத்துப் பிடித்து ஆட்களை மதுரை விமான நிலையத்தில் குவித்து வைத்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து உதயநிதியின் கார் வெளியே செல்ல அரைமணி நேரம் ஆனது. அந்தளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை மாவட்ட திமுகவினர் போதாது என்று திண்டுக்கல் மாவட்ட திமுகவினரும் உதயநிதியை தங்கள் மாவட்டத்துக்கு வரவேற்று அழைத்துச் செல்வதற்காக திரண்டிருந்தனர்.
அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணியை தனது காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வழியில் தோமையார்புரத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல் மதுரை டூ திண்டுக்கல் சாலையில் பல இடங்களில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவில் நின்று அமைச்சர் உதயநிதிக்கு திமுகவினர் உற்சாகமிகு வரவேற்பு அளித்தனர்.
அமைச்சராகிய பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் வெளியூர் அரசு நிகழ்ச்சி திண்டுக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கூடுதல் கவனமெடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிகளை ஐ.பெரியசாமியும், சக்கரபாணியும் ஒருங்கிணைத்துள்ளார்கள்.