ஓ.பன்னீர் செல்வம் தனது அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, எடப்பாடி தரப்புக்க அதிர்ச்சி கொடுக்க நினைத்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறதா என்றும், நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல், என் மகன் ஓ.பி.ரவீந்திர நாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதை எடப்பாடி பழனிசாமி தடுத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவது ஏன்?

கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நோட்டீஸிற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால், உறுதியாக சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தனது அதிகாரப்பூர்வு இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ்-க்கு நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கட்சியின் சின்னம், கொடி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வினர், சசிகலா அணியினரும் அ.தி.மு.க. கொடி, வேட்டியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal