பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி கட்டிய விவகாரம் இப்போதைக்கு முடியாது போல… ‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கி குற்றம் செய்தார்களே.. அந்த மாதிரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்’ என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

‘‘உதயநிதி அமைச்சரானதை வாரிசு அரசியலை பற்றி இன்று பேசுகின்றனர். பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இருந்தார். 50 ஆண்டு காலம் திமுக வழி நடத்தினார். வயது முதிர்வு காரணமாக அவரால் சில நிர்வாக பணிகளை செய்ய முடியாத சூழலில் பேராசிரியர் அவர்களால் ஸ்டாலினை சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு செயல் தலைவராக பேராசிரியர் அறிவித்தார். கலைஞருக்கு பிறகு இன்று ஸ்டாலின் இந்த இயக்கத்தை வழி நடத்துகிறார். அதிமுகவில் எம்ஜிஆர்க்கு பிறகு அவரது துணைவியார் ஜானகி அம்மையார், அவருக்கு பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக ஆக இருந்ததாக கூறினார்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக எம்ஜிஆர் உலகம் முழுவதும் சுற்றினார். அப்போது அன்னிய செலவாணி வழக்கில் சிக்கிக் கொண்டார். அந்த சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வந்த போது, திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியை கலைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தினர்.அப்போது திமுக 184 இடங்களை வெற்றி பெற்ற நிலையில் திமுகவை உடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக கூறினார். அப்போது தான் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி சென்றார்.

இந்திய அரசியல் சட்டத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆகலாம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு பெரும்பான்மை இருந்தும் ஆளுநரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை. பாஜகவின் சதியால் சசிகலாவால் முதலமைச்சராக முடியவில்லை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது டான்சி நிலத்தை வாங்கியதில் மாட்டிக்கொண்டு சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதே மாதிரிதான் இன்றைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கி தற்போது மாட்டி உள்ளார். என் ஜாதகம் மோசமான ஜாதகம். நான் புகார் அளித்தால் ஒன்று சிறைக்கு சென்று விடுவார், அல்லது அரசிலை விட்டு விலகி விடுவார், அல்லது பாதியில் மேலே சென்று விடுவார், அப்படி ஒரு வித்தியாசமான ராசி. இதில் அண்ணாமலை தற்போது மாட்டி உள்ளார்’’ ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

அண்ணாமலைக்கும் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal