அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களையும் அவர் நியமனம் செய்தார். மேலும் அனைத்து சார்புஅணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார்.
சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளவர்களை வளைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியிலும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதனைதொடர்ந்து இம்மாதத்தின் இறுதியில் பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
நாளை நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னையில் திரள்கிறார்கள். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய குளத்தில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்து ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் இன்று சென்னை திரும்புகிறார். இதன்பின்னர் நாளை நடைபெற உள்ள கூட்டம் தொடர்பாக இன்று மாலையில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையிலும் ஈடுபடுகிறார்.
ஓ.பன்னீர் செல்வம் நாளை என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கப்போகிறார் என்பதை அ.தி.மு.க.வினர் அதிகம் எதிர்பார்ப்பதை விட தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணத்தை விசாரித்தபோதுதான், அறிவாலயத்தில் இருந்து அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
அதாவது, ‘‘அ.தி.மு.க. பிளவு பட்டு கிடப்பதுதான் பா.ஜ.க.வை விட தி.மு.க.விற்கு நல்லது. காரணம், கடந்த இரண்டு வருட தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. நிர்வாகிகளே கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கடைசி கட்ட நேரத்தில் ‘விட்டமினை’ இறக்கி சரிகட்டி விடலாம் என தலைமை நினைக்கிறது.
அதே சமயம், அ.தி.மு.க. ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால், தி.மு.க.விற்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஏன், 30 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க. வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காரணம், கடந்த பத்தாண்டு ஆட்சியில் இருந்தும், (சரியான தலைமை இல்லை என்று சொன்னபோது)எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தும், 30 இடங்களில் குறைவான வாக்குகளில் தோல்வியைத் தழுவியதோடு, வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்திருக்கிறது.