கடந்த சில நாட்களாக இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாகவும் அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளே அதிகளவில் கள்ள நோட்டுகளாக அடிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு மிக விரைவில் ரூ.2000 நோட்டுகளைத் தடை செய்ய உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளாகவே 2000 ரூபாய் நோட்டுகளைப் புதிதாக அடிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், தற்போது கைப்பற்றப்படும் போலி நோட்டுகளில் பெரும்பாலானவை 2000 ரூபாய் நோட்டுகள் தான் என்று கூறப்படுகிறது. நாட்டில் கைப்பற்றப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 2,272ஆக இருந்தது. ஆனால், வெறும் நான்கு ஆண்டுகளில், அதாவது 2020இல் இது 2,44,834ஆக அதிகரித்துள்ளது..
மேலும், வரும் ஜனவரி 1, 2023 முதல் மீண்டும் ரூ.1000 நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வேகமாகப் பரவியது. ஏற்கனவே பனமிதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்ட போது, பட்ட துன்பங்களை மக்கள் மறக்காத நிலையில், இந்த வீடியோ பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் பலரும் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசின் பிஐபி ஃபேக்ட் செக் விளக்கமளித்துள்ளது. அதில், ‘‘வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளதாகவும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட உள்ளதாகவும் இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அது உண்மையானது இல்லை. அரசு இது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் மத்திய அரசு தொடர்ந்து 2000 ரூபாய் அச்சடிப்பதைக் குறைத்துக் கொண்டே வந்தது. 2016-17ல் 3,542.991 மில்லியன் (சுமார் 352 கோடி நோட்டுகள்) 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட நிலையில், அது 2017-18இல் 111.507 மில்லியனாகவும் (11 கோடி நோட்டுகள்) 2018-19இல் 46.690 மில்லியனாகவும் (4 கோடி நோட்டுகள்) குறைக்கப்பட்டது. அதன் பிறகு கடைசி 3 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி ஒரு 2000 ரூபாய் நோட்டையும் புதிதாக அடிக்கவில்லை. இப்போது ஏடிஎம் இயந்திரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் அகற்றப்பட்டன. இதன் காரணமாகவே 2,000 ரூபாய் புழக்கம் கணிசமாகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.