முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை உடைத்து, அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம்தான் தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் தேர்தலில் திமுக தரப்பு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக கவுன்சிலரை கைது செய்ய முயல்வதாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் புகார் அளித்திருந்தனர்.

கரூர் மாவட்ட ஊராட்சியில் 12 வார்டுகள் இருக்கும் நிலையில் அப்போது நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் திமுக கூட்டணி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் அதிமுக உறுப்பினர் எம் எஸ் கண்ணதாசன் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து முத்துக்குமார் என்பவர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்ற நிலையில் திமுகவின் பலம் நான்காக அதிகரித்தது. அதிமுக பலம் எட்டாக குறைந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத சூழலில் அப்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பலமுறை தேர்தல் நடத்த திட்டமிட்டும் பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இரண்டு பேர் திமுகவில் இணைந்ததால் ஆறுக்கு ஆறு என்ற சம்பவம் உருவானது.

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் மாவட்ட துணை ஊராட்சி தலைவர் போட்டிக்கு திருவிக என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவரை அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மதுரையில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இன்று இரண்டு மணிக்குள்ளாக அவரை கரூர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் மதுரையில் இருந்து கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வேட்பாளர் திருவிக மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கொண்டிருந்தனர். வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பாலம் அருகே வந்தபோது திடீரென நான்கு காரில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சரின் காரை வழிமறித்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அமைச்சரின் கார் கண்ணாடியை உடைத்து அவர்கள் மற்ற கார்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திருவிக என்பவரையும் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு மணிக்குள் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் முடிந்துவிடும் என்பதால் வேட்பாளரை திமுகவினர் கடத்தி விட்டதாகவும் தகவல் பரவியது, இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் துர்கா தேவி மற்றும் வேடசந்தூர் ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், திமுகவினர்தான் வேட்பாளரை கடத்தினார்கள் எனக் கூறி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் குவிய தொடங்கியதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal