வருகிற பாராளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றி விட வேண்டும் என பா.ஜ.க. மிரட்டுவதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ‘உண்மையை’ உடைத்திருப்பதுதான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கிறது!
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மும்முரமாக இருக்கிறது. அதிமுகவின் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் கோஷ்டிகளை ஒருங்கிணைப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி பாஜக மேற்கொண்டு வருகிறது. அதிமுகவில் முரண்டுபிடிக்கும் இபிஎஸ் கோஷ்டியை பல்வேறு வியூகங்கள் மூலம் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது பாஜகவின் நம்பிக்கை.
அதேநேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் இருக்க வேண்டும் என்பதும் பாஜகவின் வியூகம். குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறக் கூடாது என்பதிலும் டெல்லி பாஜக மும்முரமாக இருக்கிறது. அப்படி திமுக அணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் பாஜகவை கழற்றிவிட்டு அதிமுக இபிஎஸ் கோஷ்டி, காங்கிரஸ் கூட்டணிக்கு கரம் நீட்ட தயாராக இருப்பதாக தகவல்கள் கசிகிறது.
இந்நிலையில்தான் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சிவி சண்முகம் பேசிய பேச்சு பாஜக, திமுக அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் போது திமுக- & பாஜக கூட்டணி அமையும் என சண்முகம் கூறியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், ‘‘சிவி சண்முகம் எப்போது பாஜகவில் சேர்ந்தார் என எனக்கு தெரியவில்லை. காசியில் இருந்துவிட்டு இப்போதுதான் கோவை வந்துள்ளேன். சென்னைக்கு சென்ற பின்னர் சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்தது குறித்து விசாரிக்கிறேன்’’ என கிண்டலடித்திருந்தார்.
தமிழக பா.ஜ.க.வினருக்கு ஏற்பட்டுள்ள திடீர் ஆவேசம்… சி.வி.சண்முகம் பேசிய பேச்சுக்கள் பற்றி அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘இந்தியாவில் காங்கிரஸ் கட்சி என்ற பேரியக்கம் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும் போல! அந்தளவிற்கு காங்கிரசுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது பா.ஜ.க.
அதாவது, பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை கூட்டணியில் இருந்து திமுக வெளியேற்ற வேண்டும் என நெருக்கடி தருகிறது டெல்லி பாஜக மேலிடம் என்பதுதான். இது நீண்டகாலமாக அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகிற விவகாரம்தான். டெல்லி பாஜகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்கேயும் உயிர்ப்புடன் இருந்துவிடக் கூடாது என்பதுதான். இதனாலேயே காங்கிரஸ் கட்சியை குழிதோண்டிப் புதைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை வாரி அணைத்துக் கொள்கிறது பாஜக.
இந்தியாவிலேயே காங்கிரஸ் உயிர்ப்புடன் இருக்கும் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதுவும் திமுக கூட்டணியின் தயவில்தான் காங்கிரஸ் இங்கே உயிர்ப்புடன் இருக்கிறது. திமுக கூட்டணி இல்லாமல் போனால் காங்கிரஸ் நிலைமை பரிதாபம்தான். அதைத்தான் டெல்லி பாஜக விரும்புகிறது. இதனையே சிவி சண்முகமும் தமது பொதுக்கூட்டப் பேச்சில் போட்டுடைத்திருக்கிறார்.
அதே சமயம், காங்கிரசுக்கு எதிராக ஆம் ஆத்மியை வளரவிட்டு, ஆட்டை கோவிலுக்கு பலிகடாக ஆக்குவதுபோல் பா.ஜ.க. ஆக்கிவிடும். அதன் பிறகு இந்தியாவில் ஒரே தேசிய கட்சி பா.ஜ.க. என்ற நிலை உருவாகும். இதைத்தான் மெல்ல மெல்ல பா.ஜ.க. செய்து வருகிறது.
மேலும், அ.தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி அமைய எடப்பாடிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் சுனில் பாலமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகிறது. அவ்வப்போது எடப்பாடிக்கு ஆலோசனை தரும் சுனில், பா.ஜ.க.வை கழற்றி விடுமாறும் அவ்வப்போது கூறி வருகிறாராம். இந்த நிலையில்தான், தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி அமைந்தால் தோல்வியைத் தழுவும், தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெறும் என்று சில நாட்களுக்கு முன்பு கருத்துக் கணிப்புகள் வெளியானதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது’’ என்றனர்!