அ.தி.மு.க.வில் 90 சதவீதத்திற்கும் மேல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை உருவாக்கி, அதனை நீதிமன்றத்தில் நிரூபித்துக் காட்டத் தயாராகி வருவதுதான் அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டம் மூத்த அரசியல் தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை எடப்பாடி தரப்பு விரைவில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், ஜனவரி 4&ந்தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் எனக்குதான் 100 சதவீதம் ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க தயாராகி வருகிறார்.

கு.ப.கிருஷ்ணன்

ஓ.பி.எஸ்.ஸின் மாஸ்டர் பிளான் பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொட்டு கோலோச்சி வருபவர் கு.ப.கிருஷ்ணன். தற்போது இவர் ஓ.பி.எஸ். அணியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறது. அவ்வப்போது கு.ப.கி. முக்கியமான ஆலோசனை வழங்கி வருவதோடு, மாவட்டங்களில் ஓ.பி.எஸ். அணிக்கான ஆதரவையும் நாளுக்கு நாள் வலுப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளிப் போவது ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருகிறது. காரணம், அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து அவரை இடைக்காலப் பொதுச் செயலாளராக பொதுக்குழுவால் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த எடப்பாடி தரப்பு எங்களுக்கான ஆதரவை ஆதாரத்துடன் கொடுத்திருக்கிறோம் என்று கூறிதான் வழக்கை நடத்தி வருகிறது.

தற்போது, வருகிற 21&ந்தேதி ஓ-.பி.எஸ். அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக்கூட்டத்தில் பொதுக்குழுவிற்கான தேதி அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க.வில் மீண்டும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.ஸும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

அ.தி.மு.க.வைப் பொறுத்வரை ஜெயலலிதாதான் நிரந்திர பொதுச் செயலாளர். அவர் மறைந்த பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதையே தற்போது ஓ.பி.எஸ். மீண்டும் உருவாக்கி பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற இருக்கிறார். இப்படி 100 சதவீதம் அங்கீகாரத்தை பெற்று, அந்த ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார்.

வருகிற ஜனவரி 4&ந்தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழங்க இருக்கிறார். அப்போது, அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டு இருப்பதை உச்சநீதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தெளிவாக புரியவைத்து, தன் அனுமதியின்றி அ.தி.மு.க.வில் எந்தவொரு விவாரமும் நடைபெறக்கூடாது என்ற உத்தரவாதத்தையும் பெற இருக்கிறார்’’ என்றனர்.

ம்ம்ம்ம்…. அவ்வளவு எளிதாக ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்டிவிட முடியுமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal