வருகிற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருக்கிறார். அதே சமயம், ஓ.பி.எஸ். மூலம் பா.ஜ.க. மேலிடம் எடப்பாடிக்கு ‘செக்’ வைக்க முயல்கிறது. ஆனாலும், ‘எதற்கும் தயார்’ என எடப்பாடி பழனிசாமி துணிந்திருப்பதுதான் பா.ஜ.க. மட்டுமின்றி ஓ.பி.எஸ்.ஸுக்கும் அதிர்ச்சியளிக்கிறது!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு எப்படி இந்த திடீர் துணிச்சல் வந்தது என்பது பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், ஒன்றிணைந்த அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும்… அதே சமயம் எடப்பாடிக்கு மறைமுகமாக செக் வைக்க வேண்டும்… என்ற பி.ஜே.பி.யின் பிளானை எடப்பாடி பழனிசாமியும் அறியாதவர் அல்ல!

எடப்பாடி பழனிசாமிக்கு 95 சதவீத நிர்வாகிகள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எடப்பாடி பழனிசாமியிடம்தான் தற்சமயம் பெரும்பாலான கட்சி, கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எவ்வளவுதான், தனக்கு சிக்கல்கள், நெருக்கடிகள் இருந்தாலும், திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதுணையுடன் இருந்து வருகிறார் என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்..

ஒற்றை தலைமை விவகாரத்தை ஏற்காமல், பிடிவாதமாக ஏற்காமல், பாஜகவை எதிர்க்கவும், தவிர்க்கவும் எடப்பாடி துணிந்துவிட்டார் என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இல்லாமல், பாஜகவால் தமிழகத்தில் களம் காண முடியாது என்பதும் மேலிட தலைவர்களுக்கு தெரியும்.

இவ்வளவு இருந்தும், நிர்வாகிகள் ஆதரவை அவ்வளவாக பெறாத ஓபிஎஸ்ஸை ஏன் இன்னமும் மேலிட தலைவர்கள் விடாமல் வைத்துள்ளனர். இதற்கு காரணம், ஓ.பி.எஸ். மூலம் எடப்பாடிக்கு செக் வைக்க வேண்டும் என்பதுதான்!

ஓ.பி.எஸ்.ஸைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. என்ற இயக்கத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டு வருகிறார். தேர்தல் சமயங்களில் ‘செலவு’களை செய்யாமல், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார். இது எந்த வகையில் நியாயம்’’ என்றவர்கள் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்!

‘‘கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் சுனில், தற்போது இவர் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவருக்கு கீழ் அப்போது வேலை செய்தவர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி ஒரு ரகசிய சர்வே எடுத்து வைத்திருக்கிறார்.

அந்த சர்வேயில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விடன் கூட்டணி வைக்காமல் எடப்பாடி பழனிசாமி தனித்துப் போட்டியிட்டால், 30 இடங்களில் வெற்றி பெறுவார் என்றும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் 15 இடங்களில் வெற்றி பெறும் என சர்வே முடிவை கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, பா.ஜ.க. இல்லாமல் போட்டியிட்டால்தான் அ.தி.மு.க.விற்கு பலம்! அதனால்தான், பா.ஜ.க. எத்தகைய குடைச்சல்களை கொடுத்தாலும், பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி, அதே, சமயம், தி.மு.க.வின் செயல்பாடுகளால் அதிருப்தியில் கட்சி நிர்வாகிகளே இருக்கிறார்கள். இதனால்தான், எடப்பாடிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் சர்வேயில் கூறப்பட்டிருக்கிறது’’ என்றனர்!

பொறுத்திருந்து பார்ப்போம்… என்ன நடக்கிறது என்று..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal