‘உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல… அவரது மகன் இன்பநிதியும் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்போம்’ என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சேலம் திமுக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய அமைச்சர் கே.என்.நேரு;-

‘‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடியுள்ளதா? யார் ஆட்சியில் தேனாறும், பாலாறும் ஓட முடியும் என கேள்வி எழுப்பினார். சேலம் எம்ஜிஆர், ஜெயலலிதா கோட்டையாக இருக்கலாம். இனிவரும் காலத்தில் தளபதி கோட்டையாக மாறும்.

சேலத்தில் திமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில் வருங்காலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினராக மாறுவார்கள். அனைத்திலும் திமுக வெற்றிபெறும். எதிர்க்கட்சி நினைப்பது எப்போதும் நடக்காது. வாரிசு அரசியல் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள்.

திமுகவை கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுவோம். அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம். உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் இன்பநிதி வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். மேலும், உங்களையெல்லாம் பேச விட்டது ரொம்ப தவறா போச்சு. இனி தளபதி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், உங்களுக்கு இடியாகத்தான் இருக்கும்’’ என அமைச்சர் கே.என்.நேரு ஆவேசமாக பேசியுள்ளார்.

தி.மு.க.வில் அடுத்த வாரிசுக்கும் கே.என்.நேரு அழைப்பு விடுத்திருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal