சமீபத்தில் தி.மு.க. கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில அளவில் மற்ற சமூதாயத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் முத்தரையர் சமுதாயத்திற்கு கொடுக்கப்படவில்லை என்று அச்சமூகத்தினர் தி.மு.க.வை புறக்கணிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வருகிறது.

தி.மு.க.வில் இருக்கும் முத்தரையர் சமுதாயத்தினரின் மனக்குமுறல்கள் பற்றி சில சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம்.

‘‘சார், சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. முத்தரையர் சமுதயாத்தைச் சேர்ந்த ஒருவர் (மெய்யநாதன்) அமைச்சராக இருக்கிறார். அவரிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை பறித்துவிட்டனர். அதே போல், தி.மு.க.வில் சில புதிய அணிகளை உருவாக்கினார்கள். அதிலும் மாநில அளவில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த, கட்சியில் நெடுங்காலமாக பணியாற்றி வருபவர்களுக்கு எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி பா.ஜ.க.விற்கு சென்றார். அடுத்த நிமிடமே, அதே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜூக்கு கட்சியில் முக்கிய பதவியும், எம்.பி. பதவியும் தேடிச் சென்றது. அதே போல், வன்னியர், கள்ளர், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி வரை முத்தரையர் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக கொடுத்து வருகிறார்கள். அப்படியிருந்தும், நாங்கள் அ.தி.மு.க.விற்கு செல்லாமல் தி.மு.க.வில் இன்று வரை இருந்ததற்கு எங்களுக்கு நல்ல மரியாதையை கொடுத்துவிட்டார்கள். நாங்களும் மாற்றி யோசிக்க நேரம் வந்துவிட்டது’’ என்றனர்!

மேலும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ‘‘மக்கள் நீதி மய்யத்திலிருந்து வந்த பத்ம பிரியாவுக்கு மாநில பதவி தர முடியுது, கட்சியில் காலம் காலமாக பயணிக்கும் முத்தரையர் சமூகத்தினருக்கு தர முடியாதா? தி.மு.க.வில் இதுவரை ஒரு முத்தரையருக்கு கூட ராஜ்ய சபா எம்.பி. பதவி தரவில்லை நாம் என்ன வெறும் கிள்ளுக்கீரையா? 2024 -ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-வை புறக்கணித்து நம் எதிர்ப்பை காட்டுவோம்’’ என முத்தரையர் சமூக இளைஞர்கள் டிவிட்டரில் சூளுரைக்கின்றனர்.
மேலும் டிவிட்டரில் @Boycott_dmk #SocialJustice4Mutharaiyar டெரென்டிங் ஆகி வருகிறது!

மத்திய மாவட்டமான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கள், சிவகங்களை என பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது முத்தரையர் வாக்குகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal