முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது அலாதி பிரியம் கொண்ட டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற போது, கலந்து கொள்ளாததுதான் ஏன் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் பேசினோம்.

‘‘அமைச்சரவை மாற்றத்தின்போது பதவி கிடைக்காததால் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் கடுமையாக அப்செட்டில். இந்த அமைச்சரவை மாற்றத்தில் தனது மகனும், மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருப்பவருமான டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தாராம் டி.ஆர்.பாலு.

ஆனால், ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களில் ஒருவரையும் தூக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை. உதயநிதி ஸ்டாலின் மட்டுமே அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், டிஆர் பாலு அப்செட் ஆனதாகவும், அதன் காரணமாகவே, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுமேடைகளில், ‘டி.ஆர்.பாலு மாமா…!’ என்றுதான் உரிமையோடு அழைப்பார் உதயநிதி!

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி பதவியேற்ற போது, அவர் கொடுத்த சால்வையைக் கூட முறையாக வாங்கவில்லை டி.ஆர்.பாலு! அடுத்த சில நாட்களில் முலாயம் சிங் மறைவிற்கு உதயநிதியை உத்திரபிரதேசத்திற்கு அழைத்துச் சென்றார் டி.ஆர்.பாலு. அந்தளவிற்கு பாசமாக இருந்துவிட்டு, பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு பாராளுமன்ற கூட்டத்தொடரை காரணம் காட்டுவதை நம்பமுடியவில்லை. காரணம், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியே, டெல்லி செல்லாமல் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்’’ என்றனர்.

இந்த விவகாரம் குறித்து ‘மாப்பிள்ளை’க்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம்.

‘‘சார், தி.மு.க.வில் ஏதாவது ஒரு முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், மருமகன் சபரீசனிடம் ஸ்டாலின் சில ஆலோசனைகளைக் கேட்கிறார். அவரும் திறம்பட சில விஷயங்களைச் சொல்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க பெற்ற வெற்றிக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சபரீசன். இதனை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில்தான் அமைச்சரவை மாற்றம் பற்றி மு.க.ஸ்டாலின் பேசியபோது, ‘யாரையும் நீக்க வேண்டாம்… பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும். என்றதோடு, ‘டி.ஆர்.பி.ராஜாவிற்கு இன்னும் வயது இருக்கிறதே… அடுத்த முறை பார்ப்போம்’ என்று ஆலோசனை சொன்னாராம். அதோடு, உதயநிதிக்கு, சிறப்பு திட்ட செயலாக்க துறையை கொடுக்கச் சொன்னதே சபரீசன்தான். முதல்வர் கைவசம் வைத்திருக்கும் துறையை கொடுத்தால்தான், அமைச்சரவையில் முக்கியத்துவம் பெற முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்தினார் சபரீசன். கடந்த சில தினங்களுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு மாநகராட்சி மேயர்களிடம் ஆலோசனை நடத்தியதோது, சில அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார். விரைவில் மாநகாராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் மாற்றம் நடக்கும்!’’ என்றனர்.

எது எப்படியோ, ‘மாப்பிள்ளை’ வைத்த ‘செக்’கால், ‘மாமா’ மிஸ்ஸாகிவிட்டார்… இதனால் எழக்கூடிய விமர்சனங்களும் தடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal