வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

பா.ம.க.வின் திடீர் மனமாற்றம் பற்றி தைலாபுரம் தோட்டத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பலம் என்று தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் யோசித்து கொண்டிருக்கின்றன. சிறிய கட்சிகளோ எந்த அணியில் இடம் பிடிப்பது பலன் கொடுக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளன. அந்த வகையில் பா.ம.க. இப்போதே கூட்டணி பற்றி யோசிக்க தொடங்கி விட்டது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வருகிற தேர்தலில் கூட்டணி மாறும் முடிவுக்கு வந்துள்ளது.

அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவும், மத்தியில் பா.ஜனதா ஆட்சியே அமைந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகமும்தான். 2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. அப்போது 6 தொகுதியில் பெற்றிபெற்றது. அரங்கவேலு ரெயில்வே மந்திரியாகவும், அன்புமணி சுகாதார மந்திரியாகவும் இருந்தார்கள். 2014 தேர்தலில் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,-பா.ஜனதா கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. தற்போது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே வருகிற தேர்தலில் மீண்டும் 5 எம்.பி.க்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று பா.ம.க. விரும்புகிறது. எனவே கூட்டணி மாறும் முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல் பா.ம.க. செயல்பாட்டிலும் மாற்றம் தெரிகிறது. தி.மு.க.வை விமர்சிப்பதில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. உதயநிதி பதவி ஏற்பு விழாவை கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் புறக்கணித்த நிலையிலும் பா.ம.க. கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பங்கேற்று உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். தி.மு.க.விலும் பா.ம.க. இணைவதை பலமாகவே நினைக்கிறார்கள். காரணம், வடமாவட்டங்களில் தி.மு.க. சொல்லிக்கொள்ளும்படியான இடங்களில் வெற்றி பெறவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்தில்தான் தி.மு.க. வென்றது. பா.ம.க. கூட்டணியில் இருந்தால் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. வென்றிருக்கும்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றது. இப்போது பா.ஜனதாவின் வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது. எனவே 4 சதவீதம் வாக்கு வங்கியை வைத்திருக்கும் பா.ம.க.வை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளவே தி.மு.க. விரும்புகிறது’’ என்றனர்.

ஆக, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியாகிவிட்டது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal